சென்னை,:திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் ஏரியில், விதியை மீறி மீண்டும் மண் எடுப்பதால், அபாய பள்ளங்கள் உருவாகி வருகின்றன. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், பாலவாக்கம் ஏரி வாயிலாக, அப்பகுதியில் 1,000 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்று வருகிறது. காய்கறிகள், கீரைகள், பூக்கள், நெல் உள்ளிட்ட பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில், பாலவாக்கம் ஏரியில் இருந்து சென்னை எல்லை சாலை மற்றும் சித்துார் - தச்சூர் ஆறு வழிச்சாலை பணிக்காக, மண் எடுக்கப்படுகிறது.இந்த ஏரியில் இருந்து மண் எடுப்பதால், வரும் காலங்களில் அதிக நீரை சேமித்து பயன்படுத்தலாம் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், 1 மீட்டருக்கு மண்ணை அள்ளாமல், பல இடங்களில் 4 மீட்டருக்கு மேல்,'பொக்லைன்' வாயிலாக மண்ணை வெட்டி எடுத்து வருகிறது.இந்த வகையில் நாள்தோறும், 100 லாரிகளுக்கு மேல் விதியை மீறி மண் எடுத்துச் செல்லப்படுகிறது. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில், கடந்த 5ம் தேதி வெளியானது. இதையடுத்து, கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவுப்படி, மண் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது.உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, கனிம வளத்துறை மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், முறைப்படி மண் எடுக்கப்பட்டு வருவதாக, அவர்கள் அறிக்கை அளித்ததாக தெரிகிறது.இதையடுத்து, மீண்டும் மண் அள்ளும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. நாள்தோறும் 150க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் அள்ளப்படுகிறது.இதனால், அபாய பள்ளங்கள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக வரும் காலங்களில், ஏரியில் நீர் தேங்குவது குறையும். நிலத்தடி நீர் பற்றாக்குறையும் ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு, எதிர்க்கட்சிகளுக்கு ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, பெரிய அளவில் 'கவனிப்பு' நடந்து உள்ளது.மாவட்ட தி.மு.க., நிர்வாகி ஒருவர் உத்தரவுப்படி, விதியை மீறி மண் அள்ளும் பணி தொடர்ந்து நடப்பதாக புகார் எழுந்துள்ளது.எனவே, இப்பிரச்னையில், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இது தொடர்பாக தலைமை செயலருக்கு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.அதில், விதியை மீறி மண் எடுப்பதை அனுமதிக்கும் மாவட்ட அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.