உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பார்முலா -- 4 கார் பந்தயம் அட்டவணை வெளியீடு

பார்முலா -- 4 கார் பந்தயம் அட்டவணை வெளியீடு

சென்னை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை பார்முலா - 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தயம், வரும் 31 மற்றும் செப்., 1ல் சென்னையில் நடத்தப்படுகிறது.இந்தியாவில் முதல்முறையாக, இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் இது. மேலும், தெற்காசியாவிலேயே இரவு பார்முலா - 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ போகிறது.மொத்தம் 3.5 கி.மீ., சுற்றளவு உடைய சர்க்யூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது. தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை வழியே, இந்த பந்தயம் நடக்க உள்ளது.இதற்கிடையே, இந்த கார் பந்தயத்திற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நேற்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு பட்டியலிடப்படவில்லை. இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

தடை செய்யப்பட்ட பொருட்கள்

போட்டியை காண செல்பவர்கள் குறிப்பிட்ட சில பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிளேடு, கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கி, லேசர் லைட், ஏர் ஹாரன்கள், இசைக்கருவிகள், தீப்பிடிக்கக்கூடிய தீப்பெட்டி, பட்டாசு, மதுபானம், எரியக்கூடிய திரவங்கள், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், அங்கீகரிக்கப்படாத விளம்பர பொருட்கள், குடை மற்றும் நிழல் கட்டமைப்புகள், பாட்டில்கள், வெளிப்புற உணவுப்பொருட்கள், மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், திறந்த தண்ணீர் பாட்டில்கள், டிரோன்கள், மின்-சிகரெட், சிகரெட், அனுமதிக்கப்படாத கேமராக்கள், லேப்டாப், தலைக்கவசம், விற்பனையாளர் வாகனங்கள், பலுான்கள், முட்டை, சாதி, மத, பாலினம் மற்றும் இனத்திற்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகள் அங்கீகரிக்கப்படாத விளம்பர பொருட்கள், வணிக விளம்பரம் கொண்ட தொப்பி, ஆடை, கொடி போன்றவை அனுமதிப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி