சென்னை, சென்னை புறவழிச் சாலையில், உள்ளாட்சி அமைப்புகளின் குப்பையை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.பெருங்களத்துார் - புழல் இடையிலான சென்னை புறவழிச் சாலை வழியாக, ஏராளமான சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி ஆம்னி பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் பயணித்து வருகின்றன.இச்சாலையின் இருபுறங்களிலும், சர்வீஸ் சாலையை ஒட்டி குடியிருப்புகள், சிறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்டவை அதிகரித்து உள்ளன.இந்நிலையில், சென்னை மாநகராட்சி மட்டுமின்றி, அருகிலுள்ள ஊராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகள், நொளம்பூர் அருகே சர்வீஸ் சாலையில் கொட்டப்பட்டு, இரவு நேரங்களில் எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இரவு முதல் அதிகாலை வரை தீ கொழுந்துவிட்டு எரிகிறது.அதன் பிறகு, காலை முதல் பகல் வரை துர்நாற்றத்துடன் கூடிய புகை காற்றில் பரவி வருகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பயணியர் மட்டுமின்றி, அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குப்பை கொட்டி எரிக்கப்படுவதை தடுப்பதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.இனியாவது, இச்சாலையில், குப்பை மற்றும் கழிவுகளைக் கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.