உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு

18 மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு

சென்னை, மெட்ரோ பயணியர் அல்லாதவர்களுக்கு, 18 மெட்ரோ ரயில் நிலையங்களில், வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது.சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில், வாகன நிறுத்த போதுமான வசதி இல்லை.மேலும், பயணியர் அல்லாதவர்களும், தங்கள் வாகனங்களை நிறுத்துவதால், வழக்கமான பயணியருக்கு வாகன நிறுத்தும் வசதி கிடைக்காத சூழல் ஏற்படுகிறது.எனவே, வழக்கமான பயணியருக்கு வாகன நிறுத்தும் வசதியை ஏற்படுத்துவதற்காக, 18 மெட்ரோ ரயில் நிலையங்களில், மெட்ரோ பயணியர் அல்லாதவர்களுக்கான வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் பயணியருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில், பயன்பாட்டின் அடிப்படையில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல், வாகன நிறுத்தும் வசதியை மட்டும் பயன்படுத்துவோரின் தேவை அதிகரித்துள்ளதால், 18 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.உதாரணமாக, அசோக் நகர், ஆலந்துார் ஆகிய மெட்ரோவில், பயணியர் அல்லாதவர்களின் பைக் நிறுத்தும் கட்டணம் 6 மணி நேரம் வரை 25 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனத்துக்கு 40 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, வழக்கமான கட்டணத்தைவிட ஒரு மடங்கு அதிகம்.தவிர 30 நாட்களில், குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணியருக்கான வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ் வசதி, விம்கோ நகர் பணிமனை, தியாகராய கல்லுாரி, நேரு பூங்கா, கோயம்பேடு, அசோக் நகர், ஆலந்துார் ஆகிய ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.புதிய வண்ணாரப்பேட்டை, நந்தனம், எழும்பூர், ஷெனாய் நகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில், வாகன நிறுத்தும் இட வசதி இல்லாத காரணத்தால், மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடந்த 30 நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாதோர் அல்லது 15க்கும் குறைவான பயணம் செய்தோருக்கு, அரும்பாக்கம் மற்றும் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.மீதமுள்ள மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில், வாகன நிறுத்தம் கட்டணத்தில் எவ்வித மாற்றம் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடையாற்று பிரமாண்ட துாண்களில்

மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டமாக, மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில், பரங்கிமலை - பூந்தமல்லி சாலை அருகே, அடையாற்று பகுதியில், மேம்பால மெட்ரோ ரயில் பாதை அமைக்க, ஏற்கனவே எட்டு துாண்கள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டன. அந்த துாண்களில் தற்போது, மேம்பாலம் அமைக்கும் பணிகள், இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.அடுத்த சில வாரங்களில், மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த தடத்தில், வரும் 2026ல் பணிகளை முடித்து, மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட உள்ளதாக, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எந்தெந்த ரயில் நிலையங்கள்

திருவொற்றியூர், திருவொற்றியூர் தேரடி, காலடிப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., நந்தனம், கிண்டி, ஆலந்துார், நங்கநல்லுார் சாலை, மீனம்பாக்கம், விமானநிலையம், அசோக்நகர், திருமங்கலம், எழும்பூர் ஆகிய 18 மெட்ரோ ரயில் நிலையங்களில், மெட்ரோ பயணியர் அல்லாதவர்களுக்கான வாகன நிறுத்த கட்டணம், ஒரு மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை