உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துார்ந்த பழைய மழைநீர் வடிகால் போரூரில் துார்வாரும் பணி துவக்கம்

துார்ந்த பழைய மழைநீர் வடிகால் போரூரில் துார்வாரும் பணி துவக்கம்

போரூர்:போரூர் ஆற்காடு சாலையில், துார்ந்து போன பழைய மழைநீர் வடிகாலை துார்வாரும் பணியில், நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டுள்ளது. போரூர், வளசரவாக்கம், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக ஆற்காடு சாலை உள்ளது. இதில், போரூர் முதல் ஆழ்வார்திருநகர் வரை உள்ள சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது. இச்சாலையில், போரூர் சந்திப்பு முதல் ஆலப்பாக்கம் பிரதான சாலை சந்திப்பு வரையும், வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்., நகர் பிரதான சாலை முதல் அகத்தீஸ்வரர் கோவில் வரையும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு இருந்தது.ஆனால் ஆக்கிரமிப்பால், மழைநீர் வடிகால் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. இந்நிலையில் வளசரவாக்கம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின், 2014ல், ஜெய் நகரில் இருந்து போரூர் சிக்னல் வரை, 2.6 கோடி ரூபாய் செலவில், 1.2 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால், பல்வேறு காரணங்களால் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்படவில்லை. அதனால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் வளசரவாக்கம் -- ஆற்காடு சாலையில், மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது.தற்போது, இச்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பெய்த மழையிலும், ஆற்காடு சாலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.எனவே, மெட்ரோ ரயில் பணிகள் முடியும் போது சாலையை விரிவாக்கம் செய்து, மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. அத்துடன், ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகாலை மீட்டு துார்வார வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, போரூர் சந்திப்பு முதல் வளசரவாக்கம் வரை உள்ள ஆற்காடு சாலையில், 800 மீட்டர் துாரத்திற்கு பழைய மழைநீர் வடிகாலை துார்வாரும் பணியில், நெடுஞ்சாலை துறை ஈடுபட்டுள்ளது.அதேபோல், எஸ்.வி.எஸ்., நகர் முதல் காமராஜர் சாலை வரை உள்ள மழைநீர் வடிகால், மாநகராட்சி சார்பில் துார்வாரப்பட்டு வருகிறது.இந்த மழைநீர் வடிகால்களில் மெட்ரோ துாண்கள் அமைக்கும் பணியின் போது, வெளியேறிய சகதி, வடிகாலில் குவிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை