உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தக்கார் நியமனத்தை எதிர்த்த வழக்கு மனுதாரர் பின்னணி குறித்து விசாரணை

தக்கார் நியமனத்தை எதிர்த்த வழக்கு மனுதாரர் பின்னணி குறித்து விசாரணை

சென்னை, நெற்குன்றம் திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி கோவில், 700 ஆண்டுகள் பழமையானது; குடும்ப கோவில் எனக் கூறும் மனுதாரர் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, அறநிலையத்துறை கேட்டுள்ளது.நெற்குன்றம் பூந்தமல்லி சாலையில், திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, கடந்த ஏப்ரலில் தக்காரை நியமித்து, குற்றாலிங்கேஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோவில் செயல் அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.இதை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த ரவி கே.விஸ்வநாதன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு, நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, குற்றாலிங்கேஸ்வரர், வைகுண்டவாசப் பெருமாள் கோவில் செயல் அலுவலர் சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார்.அதன் விபரம்:திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி கோவில், 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மாநில தொல்லியல் துறை ஆலோசகர் வி.ராமமூர்த்தி, கடந்த ஜூன் 7ல் அளித்த அறிக்கையில், இக்கோவிலில் உள்ள சிலைகள் 450 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.கர்ப்ப கிரகத்திற்கு செல்லும் பாதையில் கிடைத்த கல்வெட்டில் இடம்பெற்ற வாசகம், 17-, 18ம் நுாற்றாண்டை சேர்ந்தது. அர்த்த மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், 400 ஆண்டுகள் பழமையானவை.சந்திரம்மாள் மற்றும் மணவாளசாமி ஆகியோருக்கு சொந்தமான கோவில் என்பதற்கான ஆவணங்களை, வழக்கு தொடர்ந்தவர் தாக்கல் செய்யவில்லை. இக்கோவிலின் சொத்துக்களை, தன் தாத்தா நீலமேகம் பிள்ளை வாங்கியதாகக் கூறுவதை ஏற்க முடியாது. குடும்ப கோவில் என்றும் கூறுவது பொய். பழமையான கோவிலை, கிரய பத்திரம் வாயிலாக எப்படி வாங்க முடியும். வாங்கவோ, விற்கவோ முடியாது. தாத்தா, பேரனுக்கு, எவ்வாறு கிரய பத்திரம் எழுதி வைத்தார். பல்வேறு விஷயங்களை மனுதாரர் மறைத்துள்ளார்; இது, அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக, விரிவான விசாரணை செய்யப்பட வேண்டும். மனுதாரர், அவரது குடும்பத்தினருக்கு எதிராக, பதிவு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உதவியுடன், அறநிலையத்துறை விரிவாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆக., 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை