உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.5.5 கோடியில் காசிமேடு கடற்கரையை அழகுபடுத்தும் பணிகள் விறுவிறுப்பு

ரூ.5.5 கோடியில் காசிமேடு கடற்கரையை அழகுபடுத்தும் பணிகள் விறுவிறுப்பு

காசிமேடு, காசிமேடு கடற்கரையை, 5.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகுபடுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.குப்பை மற்றும் கழிவுகள் குவிந்துள்ள காசிமேடு கடற்கரையை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை போன்று அழகுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி, காசிமேடு கடற்கரையை,'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் வாயிலாக அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னை, காசிமேடு முதல் பார்வதி நகர் வரையுள்ள, 5 கி.மீ., நீளத்திற்கு இந்த கடற்கரை அழகுபடுத்தப்பட உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதில் முதல்கட்ட பணியாக, பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையில், சுங்கச்சாவடியில் இருந்து எண்ணுார் எக்ஸ்பிரஸ் சாலையில், 1 கி.மீ.,க்கு நடைபாதை; சுற்றுலா பயணியரை கவரும் வகையில், நீரூற்றுடன் கொண்ட பிளாசா, உணவு அரங்கம், விளையாட்டு பகுதி, கழிப்பறைகள் மற்றும் மீன் சிற்பங்கள், 'செல்பி பாயின்ட்' உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. காசிமேடு மீனவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் கலாசாரம், உணவு முறைகள் போன்ற சிறப்பம்சங்களை விளக்கும் வகையில்,'பிளாசா ஸ்டால்கள்' இடம்பெற உள்ளன. இந்த பிளாசாவில் ஸ்டால்களை அமைக்க, மீனவர்கள் ஊக்குவிக்கப்பட உள்ளனர். பிளாசாவின் நடுவில் மீன் சிற்பம் அமைக்கப்பட உள்ளது.காசிமேடு கடற்கரையை அழகுபடுத்தும் இந்த பணி, 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த மார்ச் 15ம் தேதி நடந்தது. தற்போது, காசிமேடு கடற்கரையை அழகுபடுத்தும் பணிக்கான முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதுகுறித்து ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசர் கூறியதாவது:சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைகள் மக்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறதோ, அதேபோல் காசிமேடு கடற்கரையை அழகுபடுத்த வேண்டுமென்பது, வடசென்னை மக்களின் நீண்டநாள் கோரிக்கை.மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், காசிமேடு கடற்கரையை அழகுபடுத்தும் பணிகளில் சி.எம்.டி.ஏ., களம் இறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக காசிமேடு, பெசன்ட் நகர் கடற்கரையை போன்று, அழகுற வடிவமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.காசிமேடு மீன் மார்க்கெட், எண்ணுார் விரைவுச்சாலை, வடக்கு டெர்மினல் சாலை சந்திப்பு வரையிலான, 1.5 கி.மீ., துாரத்திற்கு சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, அழகாக மாற்றப்பட உள்ளது. சுற்றுலா பயணியரை கவரும் வகையில் காசிமேடு கடற்கரை அழகுபடுத்தப்பட உள்ளதால், பொதுமக்கள் வருகை அதிகரிக்கும். அங்கு அமைக்கப்படும் உணவுக்கடைகள் வாயிலாக, மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மீனவர்களின் வாழ்க்கைத்தரம் இதனால் மேம்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ