பட்டினப்பாக்கம், சென்னை, ராயப்பேட்டை, பக்சி அலி தெருவைச் சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன், 33. இவர், பர்மா பஜாரில் மொபைல் போன்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார்.சில மாதங்களுக்கு முன், இவரது மொபைல் போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்த பெண்ணின் குரலில் ஜாவித் சைபுதீன் மயங்கியுள்ளார். இருவரும் தொடர்ந்து பேசி வந்து உள்ளனர்.இந்த நிலையில், கடந்த 17ம் தேதி அந்த பெண், ராயப்பேட்டை, கற்பகம் அவென்யூ 2வது தெருவில் நடக்கும் இரவு விருந்து நிகழ்ச்சிக்காக ஜாவித் சைபுதீனை, அப்பெண் அழைத்துள்ளார்.அங்கு வந்த ஜாவித் சைபுதீனை, நான்கு பேர் கும்பல் காரில் கடத்தியதாக கூறப்படுகிறது. பின், அந்த கார் பட்டினப்பாக்கம், நடுக்குப்பத்தில் செல்லும்போது, 'உன்னை கொலை செய்தால், 50 லட்சம் ரூபாய் தருவதாக கூறியுள்ளனர் என மிரட்டினர்.அந்த பணத்தை நீ கொடுத்தால், உன்னை உயிருடன் விட்டு விடுகிறோம்' என்றனர்.பயந்து போன ஜாவித் சைபுதீன், தன்னுடைய உறவினருக்கு போன் செய்து அங்கு வரவழைத்து, கடத்தல் கும்பலிடம் 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, சேத்துப்பட்டு பாலம் அருகே அவரை இறக்கி விட்டு கும்பல் சென்றுள்ளதாக புகார் அளித்துள்ளார்.வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் விலை உயர்ந்த மின்னணு பொருட்களை கடத்தி வந்து, குறிப்பிட்ட நபர்களிடம் சேர்க்கும் 'குருவி'யாகவும் ஜாவித் சைபுதீன் செயல்பட்டு வந்துள்ளார்.இந்த நிலையில், சம்பவம் நடந்து எட்டு நாட்கள் கழித்து, ஜாவித் சைபுதீன் நேற்று தான் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த கடத்தல் தொடர்பாக, நான்கு பேரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.