உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரெட்டேரி கொள்ளளவு உயர்த்தும் பணி கழிவுநீர் கலப்பை தடுக்க கடிதம்

ரெட்டேரி கொள்ளளவு உயர்த்தும் பணி கழிவுநீர் கலப்பை தடுக்க கடிதம்

சென்னை:ரெட்டேரி கொள்ளளவு உயர்த்தும் பணி நடக்கும் நிலையில், கழிவுநீர் கலப்பை தடுப்பதற்கு, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி., ஆகும்.சென்னையின் ஒரு மாத குடிநீர் தேவை 1 டி.எம்.சி., ஆகும். விரிவாக்கப்பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், வரும் காலங்களில் குடிநீர் தேவை 2 டி.எம்.சி.,யாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகளவு நீர் கிடைத்து வருகிறது. இவற்றை ஏரிகளில் சேமித்தால், ஆண்டு முழுவதும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க முடியும்.இதை கருத்தில் கொண்டு, பெரும்பாக்கம், முடிச்சூர், செம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், அயனம்பாக்கம், மாதவரம் ரெட்டேரி ஆகியவற்றை சீரமைக்க, அரசு முடிவெடுத்துள்ளது.இதில், ரெட்டேரியில் கூடுதல் கொள்ளளவு நீரை சேமிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வதற்கு 65 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், சுற்றுச்சூழல் பூங்காவும் அமைக்கப்பட உள்ளது.தற்போது, ஏரியின் ஒரு பகுதியில், துார்வாரும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதனிடையே, நுாறடிச்சாலை மற்றும் கொளத்துார் - செங்குன்றம் சாலை ஆகியவற்றை ஒட்டி அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல், மரக்கிடங்குகள், சிறிய தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டற்றின் கழிவுநீர், ரெட்டேரியில் கலந்து வருகிறது.இதை தடுக்கும் பொறுப்பு, சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்திற்கு மட்டுமே உள்ளது. எனவே, ரெட்டேரியில் கலக்கும் கழிவுநீரை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு, நீர்வளத்துறை வாயிலாக கடிதம் எழுதப்பட்டு உள்ளது.அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டியுள்ளதால், வழக்கம்போல காலம் தாழ்த்தாமல், விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ