உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குளிர்பானம் குடித்ததால் சிறுமி உயிரிழப்பு? தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு செய்ய உத்தரவு

குளிர்பானம் குடித்ததால் சிறுமி உயிரிழப்பு? தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை:செய்யாறில், 'கூல்டிரிங்ஸ்' குடித்ததால், 6 வயது சிறுமி உயிரிழந்ததாகத் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுதும் குளிர்பானம் தயாரிப்பு ஆலைகளில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய, தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டு உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் - ஜோதிலட்சுமியின் தம்பதியின், 6 வயது மகள் காவியாஸ்ரீ, ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அங்குள்ள பெட்டி கடையில், 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி குடித்து உள்ளார். சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூக்கிலும், வாயிலும் நுரை தள்ளி மயங்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.சிறுமி குடித்த குளிர்பான பாட்டிலில், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்ற விபரங்கள் அச்சிடப்படவில்லை. இதனால், காலாவதியான குளிர்பானம் குடித்ததால் தான், சிறுமி உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும், உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, மாநில உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கூறியதாவது:சிறுமி குளிர்பானம் வாங்கி அருந்திய பெட்டிக்கடையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதன் முடிவுகள், 10 முதல் 15 நாட்களில் வரும். அதேபோல, மாநிலம் முழுதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆய்வின்போது, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவை இல்லாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்வதுடன், தயாரிப்பு ஆலையையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.சிறுமி உயிரிழந்ததற்கான காரணம், சோதனை முடிவு வந்த பிறகே தெரியவரும். அதேநேரம், மாநில முழுதும் குளிர்பானம் தயாரிக்கும் இடங்களில் அடுத்த ஓரிரு வாரங்கள் சோதனை தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி