| ADDED : மே 03, 2024 12:25 AM
சென்னை, சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.அதில், 'மொபைல் போன் செயலி வாயிலாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரூக் அலி, 34, என்பவர் பழக்கமானார். இருவரும், படங்களையும் பகிர்ந்து கொண்டோம். என்னுடன், 'வாட்ஸாப் வீடியோ' அழைப்பிலும் பேசி வந்தார். 'அப்போது எடுக்கப்பட்ட படங்களை, 'மார்பிங்' செய்து சமூகவலைதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி, பணம் பறிக்க முயல்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, என் படங்கள் மற்றும் 'வீடியோ'வை அழிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட நபர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார், ராஜஸ்தான் சென்று பரூக் அலியை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை, சென்னைக்கு அழைத்து வந்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.