| ADDED : மே 16, 2024 12:27 AM
சென்னை, மீனம்பாக்கம் அருகே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்ட்ரல் -- விமானநிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.விமானநிலையம் --- மீனம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில், நேற்று அதிகாலை 4:15 மணிக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, சென்ட்ரல் --- விமானநிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை நேற்று அதிகாலை 5:00 மணி முதல் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், விம்கோ நகர் -- விமானநிலையம் இடையிலும், சென்ட்ரல் -- பரங்கிமலை இடையிலும் வழக்கம் போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், பயணியர் சென்ட்ரலில் இருந்து ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து விம்கோநகர் -- விமானநிலையத்துக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் மாறி செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மறுமார்க்கமாக, விமானநிலையத்தில் இருந்து ஆலந்துாரில் இறங்கி மாறி, சென்ட்ரல் நிலையம் சென்றனர். இரண்டு மெட்ரோ ரயில்களில் மாறி செல்லும் நிலையால், பயணியர் அவதிப்பட்டனர். மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள் நீண்ட நேரம் போராடி, தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர். நேற்று நண்பகல் 12:15 மணி முதல் ரயில் சேவை சீரானது.