சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, மொத்தம் மூன்று வழித்தடங்களில் 63,246 கோடி ரூபாய் மதிப்பில், 119 கி.மீ., துாரத்திற்கு 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில், மாதவரம் முதல் தரமணி வரை, சுரங்கப்பாதை வழியாகவும், பின், சிறுசேரி வரை மேம்பால பாதையாகவும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இதற்காக, இந்த தடத்தில் உள்ள சாலைகளில் தடுப்புகள் அமைத்து, ராட்சத இயந்திரங்களை நிறுவி, இரவு, பகலாக தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன.இப்பணியால், அடையாறு, மயிலாப்பூர் முதல் ஓ.எம்.ஆர்., சாலை வரை, ஏற்கனவே இருந்த சாலை அளவு குறுகலானது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.வாகன ஓட்டிகள் தட்டுதடுமாறி செல்லும் நிலையில், மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 2026ல் முடியும்
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோவில், மேம்பால ரயில் பாதைக்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள துாண்களில், மேம்பாலங்களை இணைக்க, அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்டு, ராட்சத கனரக வாகனங்களை பயன்படுத்தி வருகிறோம்.ஓ.எம்.ஆர்., முக்கியமானது என்பதால், பணிகள் தாமதம் இன்றி, விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும், பணி முடியும் இடங்களில் தாமதம் இன்றி சாலைகளை விரிவாக்கம் செய்து, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறோம். வரும் 2026ல் இந்த தடத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.