உள்ளகரம், சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், வார்டு 185க்கு உட்பட்ட உள்ளகரம் மற்றும் வார்டு 186க்கு உட்பட்ட புழுதிவாக்கம் ஆகிய பகுதியில், ஓராண்டுக்கும் மேலாக மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகள் பல இடங்களில் அரைகுறையாகவும், தகுந்த இணைப்பு கால்வாய் இல்லாமலும் கட்டப்பட்டுள்ளன. தவிர, பழைய மழைநீர் கால்வாய்களோடு முறையாக இணைக்கப்படவில்லை.இதனால், வடகிழக்கு பருவ மழையின்போது, தெருக்களில் தேங்கும் தண்ணீர், முறையாக வெளியேற வாய்ப்பில்லை என, அப்பகுதி வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் கோபிநாத், 74, கூறியதாவது:வார்டு 186க்கு உட்பட்ட புழுதிவாக்கத்தில், பாலாஜி நகர் பிரதான தெரு, பாலாஜி நகர் விரிவு 24வது தெரு, வில்லேஜ் சாலை, அன்னை தெரசா நகர், கணேஷ் நகர், மந்தைவெளி தெரு, ஜி.கே.அவென்யூ, டி.ஆர்.பாலு தெரு ஆகிய இடங்களில், 100 மீ., முதல் 300 மீ., வரை வடிகால் பணிகள் விடுபட்டுள்ளன.இவை தவிர பல தெருக்களில் வடிகால் பணிகள் இன்னும் துவங்கவில்லை. மேலும், எங்கெல்லாம் நீர் செல்ல தடை உள்ளதோ, அங்கே கல்வெர்ட் அமைத்து, கால்வாய் நீரோட்டத்தை ஒன்றுக்கொன்று இணைத்தால் மட்டுமே, இறுதியாக செல்ல வேண்டிய வீராங்கல் ஓடை நோக்கி மழைநீர் செல்லும்.தற்போது நடந்து வரும் பணிகளில், இவையாவும் அரைகுறை கட்டுமானத்தோடு உள்ளது. வார்டு 185க்கு உட்பட்ட உள்ளகரத்தில், பாலநாகம்மாள் பிரதான சாலை முதல் கணேஷ் நகர் பிரதான சாலை வரை 100 மீ., துாரத்திற்கு மட்டுமே பணிகள் முடிந்துள்ளன.மீதமுள்ள 900 மீ., துாரத்திற்கு, பழைய கால்வாய் மிக மோசமான நிலையில் உள்ளது. இதை சீரமைத்தால் மட்டுமே, வீராங்கல் ஓடைக்கு மழைநீர் முறையாக செல்லும்.மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இத்துறைக்கும், சென்னை குடிநீர் வாரியத்திற்கும் புரிந்துணர்வு இல்லாததால், பல இடங்களில் வடிகால் கட்டும்போது, குடிநீர் குழாய்கள் சேதமடைகின்றன.இரண்டு துறையினரும் பரஸ்பர ஒத்துழைப்புடன் பணியாற்றினால், மழைநீர் வடிகால் பணிகள் கூடுதல் வேகமெடுத்து, விரைவில் முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.