சென்னை,அம்பத்துாரில், 'ஆவின்' தயிர் பாக்கெட் தயாரிக்கப்பட்டு வந்தது. பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்றதும், அதை மாதவரம், சோழிங்கநல்லுார், அம்பத்துார் பால் பண்ணைகளுக்கு மாற்றினார்.அதன்படி, பாலுடன், தயிரும் ஆவின் பாலகங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அம்பத்துார் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவில் உள்ளதுபோல, பால் பண்ணைகளில், தயிரின் தரத்தை ஆய்வு செய்வதற்கு கட்டமைப்புகள் இல்லை. இதனால், தங்கள் இஷ்டத்திற்கு தயிரை உற்பத்தி செய்து, ஆவின் பால் விற்பனை பிரிவினர் அனுப்பி வருகின்றனர்.கடந்த இரு நாட்களாக, மாதவரம் பால் பண்ணையில் இருந்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்ட தயிர், உரிய தரத்தில் இல்லை.தயிர் மோர் போல இருந்துள்ளது. ஆவணி மாத அமாவாசை நாளான நேற்று, பாலகங்களில் ஆவின் தயிரை வாங்கி சென்று பயன்படுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மோர் போல வழிந்தோடிய தயிர் பாக்கெட்டுடன், பாலகங்களுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு கொடுத்த பணத்தையும் திரும்ப பெற்று சென்றனர். ஆனால், பாலகங்களுக்கு தரம் குறைந்த தயிரை சப்ளை செய்ததற்கான பணத்தை, ஆவின் நிர்வாகம் திரும்ப தரவில்லை.இது குறித்து, மாத்துரைச் சேர்ந்த ஆவின் பால் ஏஜன்ட் ஒருவர் கூறியதாவது:ஆவின் பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாக அமைச்சர், அதிகாரிகள் சொல்கின்றனர். ஆனால், பச்சை நிற பால் பாக்கெட்டை வழங்குவதில்லை. செங்குன்றத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு, பச்சை நிற பால் பாக்கெட் தாராளமாக வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ஆவின் பாலகங்களுக்கு, ஒரு நாளுக்கு 48 பால் பாக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.ஒவ்வொரு நாளும், முன்பதிவு செய்யும் பாலையும், முறையாக சப்ளை செய்யாமல், மண்டல மேலாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு அனுப்புகின்றனர். இப்போது, தரம் குறைந்த தயிரும் விற்பனைக்கு வர துவங்கியுள்ளது.அமாவாசைக்கு தர்ப்பணம் செய்வதற்கு தயிரை வாங்கி சென்று ஏமாந்தவர்கள், எங்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர். ஆவினில் தரக்கட்டுப்பாட்டு பிரிவு உள்ளதா என்று தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.