| ADDED : மே 04, 2024 12:15 AM
ஜல்லடையன்பேட்டை, ஜல்லடையன்பேட்டை - - மேடவாக்கம் பிரதான சாலையில், 60 அடி உயரத்தில் கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் துணியால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர்.வாகன ஓட்டிகள் கூறியதாவது:தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில், ஜல்லடையன்பேட்டை தனியார் வணிக வளாகம் எதிரே, சாலையோரத்தில், 60 அடி உயரத்தில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், சில மாதங்களுக்கு முன் விளம்பர பேனர் வைக்கப்பட்டது.பல டன் இரும்பு துாண் மற்றும் உலோக சட்டங்களால் உருவாக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறலை ஏற்படுத்தும் வகையில், பேனர் வைப்பதற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், மக்கள் எதிர்ப்பையும் மீறி, அதிகாரிகள் உதவியோடு பேனர் வைக்கப்பட்டது.இந்நிலையில், சில நாட்களுக்கு முன், விளம்பர பேனர் துணி பாதியாக கிழிந்து தொங்குகிறது.வாகனங்கள் அதிகம் பயணிக்கும் இந்த நெடுஞ்சாலையில், 60 உயரத்தில் கிழிந்து தொங்கும் பேனர், காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் அறுந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் அல்லது பொதுமக்கள் மேல் விழலாம். அப்படி நிகழ்ந்தால், விபத்து மற்றும் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கிழிந்து தொங்கும் பேனர் துணியை முற்றிலுமாக நீக்கி, இரும்பு சட்டகத்தையும் அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.