உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரெட்டேரியில் கிடைத்த மணல் விற்பனை ஒப்பந்ததாரருடன் அதிகாரிகள் கைகோர்ப்பு

ரெட்டேரியில் கிடைத்த மணல் விற்பனை ஒப்பந்ததாரருடன் அதிகாரிகள் கைகோர்ப்பு

சென்னை, ஒப்பந்த விதிமுறையில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி ரெட்டேரியில் மணலை அகற்றி, கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்த தகவல் அம்பலமாகி உள்ளது.சென்னை, மாதவரம் ரெட்டேரி, 520 ஏக்கர் பரப்பளவு கொண்டது என, நீர்வளத்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால் தற்போது, 320 ஏக்கர் மட்டுமே எஞ்சியுள்ளது. ஏரியை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஏரியை புனரமைக்கும் பணி, அ.தி.மு.க., ஆட்சியில் கடந்த 2018ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.இதற்காக, 40 கோடி ரூபாய்க்கு மேல் நிதி செலவு செய்யப்பட்டது. ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, ஒரு பகுதியில் சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்டன.கரையின் மேல்பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டது. தரமாக பணிகள் மேற்கொள்ளப்படாததால், கரையில் புதைக்கப்பட்ட சிமென்ட் கற்கள் சரிந்து வீணாகி உள்ளன.ஏரிக்கரையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையும் சேதமடைந்து உள்ளது.இந்நிலையில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் கோடைக்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரெட்டேரியை சென்னையின் குடிநீர் ஆதாரமாக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, 43 கோடி ரூபாயில், ஏரியை துார்வாரி கரைகளை பலப்படுத்தவும், உபரிநீரை வெளியேற்றும் மதகுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.சென்னையைச் சேர்ந்த ஒரு ஒப்பந்த நிறுவனத்திடம், பணிகள் வழங்கப்பட்டு உள்ளன.தற்போது, இரண்டு மாதங்களுக்கும் மேலாக துார்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரியில் பறவைகள் தங்குவதற்கு, செயற்கை தீவும் அமைக்கப்பட்டு வருகிறது.ஏரியில் துார்வாரிய போது, சில இடங்களில் ஆற்று மணல் கிடைத்துள்ளது. வண்டல் மண்ணுடன், இந்த மணலை அகற்றி, அருகில் கட்டுமானம் செய்து வரும் நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு இரண்டு மாதங்களில், 50 லோடு ஆற்று மணல் மற்றும் 50 லோடு வண்டல் மண் ஆகியவற்றை, ஒப்பந்த நிறுவனத்திடம் கூட்டணி அமைத்து, நீர்வளத் துறை அதிகாரிகள் விற்பனை செய்துள்ளனர்.இதுகுறித்து, நீர்வளத்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது:ரெட்டேரியில் துார்வாரி எடுக்கப்படும் மண்ணை, கரையை பலப்படுத்தும் பணிக்கு பயன்படுத்த வேண்டும். கரையை பலப்படுத்தியது போக கிடைக்கும் மண் மற்றும் மணலை, கிடங்கிற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழைக் காலங்களில், நீர்நிலைகளின் கரைகளில் உடைப்பு ஏற்படும் போது, மணல் மூட்டைகள் தயாரிப்பதற்கு அந்த மண் மற்றும் மணலை பயன்படுத்த வேண்டும் என, ஒப்பந்தத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.ஆனால், கரையை பலப்படுத்துவதற்கு வண்டல் மண்ணை பயன்படுத்தி உள்ளனர்.அதிக அளவு கிடைத்த வண்டல் மண்ணை, முதலில் விற்றுள்ளனர். ஆற்று மணல் கிடைத்ததால், அதையும் அதிகாரிகள் விற்றுள்ளனர்.இதில் பெரும் பணம், மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை கைமாறி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் தான் ஏரி புனரமைப்பில் முறைகேடு நடந்தது என்றால், இப்போதும் அதே போல் நடந்து வருகிறது.இதற்கு, முதல்வர் ஸ்டாலின் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போது தான், கொளத்துார் தொகுதி மக்களின் குடிநீர் தேவையை, ரெட்டேரி வாயிலாக தீர்த்து, மக்களின் வரவேற்பை பெற முடியும். இவ்வாறு நீர்வளத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை