சென்னை:ராயப்பேட்டை மணிக்கூண்டு, அண்ணா சாலை இடையிலான ஒயிட்ஸ் சாலையில், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், ஹோட்டல்கள், கார் டயர் விற்பனை கடைகள், தனியார் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி முஸ்லீம் பெண்கள் பள்ளி, மால் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.இச்சாலையில், காலை முதல் இரவு வரை எப்போதும் வாகன நடமாட்டம் இருக்கும். தற்போது, மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, இச்சாலை ஒருவழியாக மாற்றப்பட்டு உள்ளது.அண்ணா சாலை மற்றும் ஸ்மித் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், ராயப்பேட்டை மணிக்கூண்டு நோக்கி செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து ஒயிட்ஸ் சாலைக்கு செல்ல அனுமதியில்லை.மெட்ரோ ரயில் பணிகள் துவங்குவதற்கு முன்பாக, ஒயிட்ஸ் சாலையோரங்களில், தங்களது டூ - வீலர்கள், கார்கள் உள்ளிட்டவற்றை பலரும் ஓரமாகவிட்டு செல்வர்.மெட்ரோ ரயில் பணியால் சாலை மூடப்பட்டுள்ளதால், வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ஸ்மித் சாலை சந்திப்பு முதல் முஸ்லீம் பெண்கள் பள்ளிவரை, சாலையோரத்தில், பழைய கார்கள், லோடு வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்டவை மாத கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கதவு, ஜன்னல் உள்ளிட்ட பழைய பொருட்களும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன.இதனால், பிளாட்பாரத்திலும், சாலையோரத்திலும் நடந்து செல்ல முடியாமல், பள்ளி மாணவியர், பாதசாரிகள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அலுவல் காரணமாக அங்கு வருவோர், தங்களது கார்களை ஓரமாக விட்டு சென்றால் 'நோ பார்க்கிங் ஏரியா' எனக்கூறி, போக்குவரத்து போலீசார் 500 ரூபாய் வரை அபராதம் வசூல் செய்கின்றனர்.ஆனால், மாத கணக்கில் நிற்கும் பழைய வாகனங்களை, போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி மாநகராட்சி மண்டல அதிகாரிகளும் கண்டும், காணாமலும் இருந்து வருகின்றனர்.இனியாவது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பாதசாரிகள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.