சென்னை:இந்தியா- - பாகிஸ்தான் போர், கடந்த 1971ல் நடந்தது. இதன் வரலாறு குறித்து, 'ஆப்பரேஷன் விஜய்- - 1971' என்ற நாடகம், வேளச்சேரி, குருநானக் கல்லுாரி அரங்கில், நேற்று அரங்கேறியது.இந்திய ராணுவத்தின் வெற்றி குறித்தும், தேசப்பக்தி, ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் விதமாகவும் நாடகம் இருந்தது.இந்திரபாலன் கதையில், மயிலாப்பூர் ராமனின் எஸ்.பி.கிரியேஷன்ஸ் நாடகக்குழு, 90 நிமிடங்களில் இந்த நாடகத்தை அரங்கேற்றியது. தமிழ்நாடு என்.சி.சி., உடான் என்ற அமைப்பு தயாரித்தது.நாடகத்தில், 45 பேர் நடித்தனர். குறிப்பாக, ஜெனரல் ஜேக்கப்பாக நடித்த மைக்கேல் முத்து, முன்னாள் பிரதமர் இந்திராவாக நடித்த ரோஷன் போஞ்சா ஆகியோரது நடிப்புக்கு, பார்வையாளர்களிடம் அதிக கைத்தட்டல் கிடைத்தது. இதில், பெங்காலி பாடல், பாரதியார் வசனம் இடம் பெற்றது. கதாபாத்திரத்திற்கு ஏற்ப, ஒளி மற்றும் ஒலி, இசை அரங்கத்தை அதிர வைத்தது.இறுதியில், 1971ம் ஆண்டு நடந்த போரில் ஈடுபட்ட 16 முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா, கேடயம் வழங்கி கவுரவித்தார்.தலைமை நீதிபதி பேசியதாவது:தேச பக்தியை உணர்த்தும் நாடகம், உணர்வுப்பூர்வமாக இருந்தது. கலைஞர்கள், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தது மிகவும் பாராட்டத்தக்கது. போரில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகளின் தியாகத்தை உணர்த்தியது.போர்க்களத்தில் நேரடியாக இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இன்றைய தலைமுறை, ராணுவத்தினரின் வீரம், தியாக வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.