| ADDED : ஜூலை 20, 2024 01:31 AM
எண்ணுார்:எண்ணுார், கத்திவாக்கம் மூன்று முனை மேம்பாலத்தின் கீழ், அனல் மின் நிலையம் செயல்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு அனல் மின் நிலையம் மூடப்பட்டது.அங்கு பணியாற்றிய, 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், வடசென்னை அனல் மின் நிலையம் பிரிவு, 1 - 2 மற்றும் மின் வாரிய அலுவலகங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.இவர்களுக்கு, எண்ணுார் அனல் மின் நிலையம் எதிரில், எர்ணாவூர்குப்பம் எதிரில், எர்ணாவூர் அருகே என, மூன்று குடியிருப்புகள் இருந்தன.ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வசித்தனர். இதில், எர்ணாவூர் அருகே செயல்பட்டு வந்த அனல் மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு பழுதானதால், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, வசிக்க லாயக்கற்ற நிலைக்கு மாறியது.இதனால், ஊழியர்கள் வேறு குடியிருப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். பின், இந்த குடியிருப்பு வளாகத்தை மூடி 'சீல்' வைத்தனர். தற்போது, இங்குள்ள சிறிய வாயில் வழியாக சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து, பழைய வீடுகளை தங்களின் புகலிடமாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அனல் மின் நிலைய நிர்வாகம் கவனித்து, இந்த வளாகத்திற்கு காவலாளிகளை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால், கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.