| ADDED : மே 22, 2024 12:42 AM
கூடுவாஞ்சேரி சென்னை, புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அருகே, காவலர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள பழைய கட்டத்தில் 'இ - பிளாக்' இரண்டாவது மாடியில் ஒரு வீடு காலியாக உள்ளது. இந்த வீட்டில், போலீசார் அவ்வப்போது வந்து ஓய்வெடுத்து செல்வர்.இந்நிலையில், கிளாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ்காரர் சரவணன், நேற்று முன்தினம் பணி முடித்து, ஓய்வுக்காக மேற்கண்ட வீட்டில் தங்க வந்துள்ளார்.அந்த வீட்டின் 'சிமெண்ட் சிலாப்' பகுதியை துடைப்பத்தால் சுத்தம் செய்துள்ளார். அப்போது மர்ம பார்சல் ஒன்று விழுந்து, பயங்கர சத்தத்துடன் இரண்டு முறை வெடித்தது. முதல் முறையாக வெடித்தபோது, அதன் அதிர்வில் ஜன்னல், கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இரண்டாவது முறையாக வெடித்ததில் கதவுகளில் விரிசல் ஏற்பட்டது. வீடு முழுதும் கரும்புகை சூழ்ந்து இருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்காரர், வீட்டில் இருந்து வெளியே ஓடிவரும்போது தவறி விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.தீபாவளிக்கு வாங்கி வைக்கப்பட்ட , நாட்டு பட்டாசுகள் சிலாப்பில் இருந்து கீழே விழுந்து வெடித்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், சத்தம் விண்ணை பிளக்கும் அளவுக்கு கேட்டுள்ளது. காவலர் குடியிருப்புவாசிகள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.குடியிருப்பு பகுதிகள் முழுதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீபாவளி பட்டாசு வெடித்து இப்படி ஒரு சத்தம் கேட்க வாய்ப்பு இல்லை. நாட்டு வெடிகுண்டு வெடித்து இருக்கலாம். இதன் பின்னணி குறித்து தீர விசாரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கின்றனர்.சம்பவ இடத்தில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன், கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ், மற்றும் தாம்பரம் உதவி கமிஷனர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். போலீசார், இச்சம்பவம் குறித்து தெளிவான தகவல்களை தர மறுத்துவிட்டனர்.மூடி மறைக்கும் முயற்சி நடக்கிறது. சம்பவம் குறித்து போலீசார் வெளிப்படையாக செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.