புழுதிவாக்கம் பெருங்குடி மண்டலத்தில் 11 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைநீர் வடிகால், குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் விஸ்தரிப்பு, பாதாள சாக்கடை உள்ளிட்ட திட்ட பணிகள் மந்தமாகின.இதனால், பல தெருக்கள் குண்டும் குழியுமாக மாறி அப்பகுதியினரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷிடம் , ஏராளமானோர் புகார் அளித்தனர்.இதையடுத்து, அந்தந்த வார்டு கவுன்சிலர்கள், துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை அழைத்து, நேற்று சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.புழுதிவாக்கத்தில் உள்ள பெருங்குடி மண்டல தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் தலைமையில், நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கிய கூட்டம், மதியம் 2:00 மணி வரை நீடித்தது.தி.மு.க., கவுன்சிலர் பாபு, 189வது வார்டு: மின்சார புதைவட கம்பிகளை மேலோட்டமாக புதைக்கின்றனர். இது பெரும் விபத்தை ஏற்படுத்தும். குடிநீர் வாரிய ஊழியர்கள், தங்கள் விருப்பத்திற்கேற்ப வேலை செய்கின்றனர். இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். 75 தெருக்களில், 1500 மீ., துாரத்திற்கு குடிநீர் குழாய்களின் நீளத்தை விஸ்தரிக்க வேண்டும். பள்ளிக்கரணை பகுதியில், சாலையோர கடைகளில், கவுன்சிலர் பெயரைக் கூறி, அதிகாரிகள் வசூல் செய்கின்றனர். முறைகேடான இந்த செயலை தடுக்க வேண்டும். அ.தி.மு.க., கவுன்சிலர் சிவபிரகாசம், 190வது வார்டு: வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள எட்டு கிணறுகளில், சுற்றுச்சுவர் உயரம் குறைந்துள்ளது. மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த கிணறுகளின் சுவர் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.தி.மு.க., கவுன்சிலர் ஷர்மிளா, 185வது வார்டு: உள்ளகரம் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வடிகால் பணியால் சேதமான சாலைகளை விரைந்து புதுப்பிக்க வேண்டும்.தி.மு.க., கவுன்சிலர் சமீனா, 188வது வார்டு: மழைநீர் கால்வாய் பணிகளுக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை உடனே மாற்றித் தர வேண்டும். சாலைகளை புதுப்பிக்க வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர். கூட்டத்தில் பெருங்குடி மண்டல தலைவர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் குறைகளை சுட்டிக்காட்டி முறையிட்ட போது, இது குறித்த நடவடிக்கைளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் கேட்டார். இதற்கு பதில் அளிக்கத் திணறிய அதிகாரிகளை, தன் வசம் இருந்த புள்ளி விபரங்களை அடுக்கி திணறடித்தார். பின், ''தேர்தல் கால விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால், இரு மாதங்களுக்கு மேலாக பெருங்குடி மண்டலத்தில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய முடியவில்லை. விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளதால் மண்டல அதிகாரிகள், குடிநீர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணிகளை முடிக்க வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் கூறினார்.