உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல மணி நேரம் மின் தடை மின் வாரிய அலுவலகம் முற்றுகை

பல மணி நேரம் மின் தடை மின் வாரிய அலுவலகம் முற்றுகை

சென்னை, கோடை வெயில் சுட்டெரித்ததால், கடந்த வாரத்தில் இருந்து வீடுகளில், 'ஏசி' சாதன பயன்பாடு வழக்கத்தைவிட அதிகரித்தது.இதனால், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, பெருங்குடி உள்ளிட்ட பல இடங்களில் மின்மாற்றி உள்ளிட்ட சாதனங்களில், 'ஓவர்லோடு' காரணமாக பழுது ஏற்பட்டதால், இரவு நேர மின் தடை ஏற்பட்டது. மின் சாதன பழுது காரணமாக, சென்னை புறநகர், கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ் காந்தி சாலை, மணலி, திருவொற்றியூர், தாம்பரம், வண்டலுார், மறைமலை நகர் என பல இடங்களில், நேற்று முன்தினம் இரவில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் புழுக்கம் அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், தாம்பரம் ஜி.எஸ்.டி., நெடுஞ்சாலையில், மின் தடை காரணமாக, சாலைகளில் உள்ள விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கன்னிகாபுரம், கவுரிப்பேட்டை, குளக்கரை தெரு, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால், 5,000க்கும் மேற்பட்ட வீடுகளில் இருள் சூழ்ந்ததால், குடும்பத்தினர் பெரிதும் அவதிப்பட்டனர்.அதிருப்தியடைந்த அவர்கள், நள்ளிரவு 11:00 மணிக்கு, வீட்டு வசதி வாரிய பகுதி மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.அங்கிருந்த மின் வாரிய ஊழியர்கள், 'லோடு' தாங்காமல் மின் வினியோகம் பாதிக்கப்பட்டதாகவும், விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மின் வினியோகம் சீரானது.அதேபோல், பட்டாபிராம், பாரதியார் நகரில், தனியார் ஐ.டி.ஐ., அருகில் உள்ள மின்மாற்றி திடீரென பழுதானதால், அதிகாலை 2:00 மணி முதல் மின் தடை ஏற்பட்டது.அதை அகற்றி, 100 கிலோவாட் திறனில் புதிய மின் மாற்றி அமைக்கும் பணி தொடர்ந்தது. நேற்று மதியம், 12:00 மணிக்கு பின், மின் வினியோகம் சீரானது.பெரம்பூர், அருந்ததி நகர் மேட்டுப்பாளையம், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக, இரவு நேரங்களில் மின்வெட்டு அதிகபட்சம் மூன்று மணி நேரம் வரை நீடிக்கிறது.வண்டலுார், சிங்காரத்தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10:15 முதல் 11:30 வரை மின் தடை ஏற்பட்டது. இதே பகுதியில் இரு மாதங்களாக தினமும் 10க்கு மேற்பட்ட தடவை மின் தடை ஏற்படுவதாக, அப்பகுதியினர் தெரிவித்தனர்.குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சி, ஆதனஞ்சேரி கிராமம், சக்தி நகர், விநாயக நகர், எம்.ஐ.டி., நகரில் 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, குறைந்த மின் அழுத்த பிரச்னையால், ஒரு வாரமாக மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.மாலை 6:00 மணிக்கு மேல் மின் விசிறி உள்ளிட்ட உபகரணங்களை இயக்க முடியாமல், புழுக்கத்தில் தவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.புதிய மின்மாற்றி அமைத்து, ஆதனஞ்சேரியில் நீடிக்கும் குறைந்தழுத்த மின் பிரச்னையை சரிசெய்யவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மின் தேவை 4,648 மெகா வாட்

சென்னையில் வெயில் சுட்டெரித்து வருவதால், மின் தேவை எப்போதும் இல்லாத வகையில் நேற்று முன்தினம், 4,648 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. அதை வெற்றிகரமாக கையாண்டு, சீரான மின் வினியோகம் உறுதி செய்யப்பட்டதாக, மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் அதிகபட்ச மின் தேவை மே, 6ல், 4,590 மெகா வாட்டாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி