சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கத்தில், தமிழக அரசின், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தொழிற்பேட்டை உள்ளது. அதன் அருகில், குறுந்தொழில் தொழிற்பேட்டையும், மகளிர் நடத்தும் நிறுவனங்களுக்கான தொழிற்பேட்டைகளும் உள்ளன. இதுதவிர, தனியார் தொழிற்பேட்டையும் உள்ளது. அவற்றில், 1,000க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை, மோட்டார் வாகன உதிரிபாகங்களை அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசு சார்பில், தொழிற்பேட்டை வளாகத்தில் ஆக., 7, 8, 9 ஆகிய தேதிகளில், 'பி2பி' எனப்படும் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.அதில், தொழிற்பேட்டையில் செயல்படும் உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன. அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்களுக்கு தேவைப்படும் உதிரிபாகங்களை வாங்கிக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சியை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைக்க உள்ளார். இதன் வாயிலாக, தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை, அங்கேயே விற்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.