சென்னை, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில், நுாற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக, இந்த கோவிலின் ராஜ கோபுரத்தை இடிக்கும் வகையிலான திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையைச் சேர்ந்த ஆலயம் காப்போம் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.ரமணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தொழில்நுட்ப நிபுணர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.அவர் கூறியதாவது:இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றவர்கள் லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மூன்று பெரிய சுரங்கப்பாதை திட்டப்பணிகளை சிறப்பாக செய்து முடித்தவர்கள். இவர்கள் தான் நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதியில் அவர்கள் ஆய்வு செய்து, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். அறிக்கையை பார்வையிட்ட நீதிபதிகள், 'கோவில் முன் வரும் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலை மாற்றியமைக்க முடியுமா என்று தான் கேட்டிருந்தோம். ஆனால், இந்த அறிக்கையில் ரயில் நிலையத்தை மாற்றியமைப்பது, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை என கூறப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி விசாரணையின் போது, நீதிமன்றம் அறிய முற்பட்ட விஷயங்கள் தொடர்பாக இந்த அறிக்கையில் விபரங்கள் இல்லை' என்றனர்.மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, ''கோவில் நுாற்றாண்டு பழமையானது. அதற்கான ஆவணங்களும் உள்ளன. தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை என கூறுவது ஏற்புடையதல்ல. கோவில் முன் வரும் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலை தான் இடமாற்றம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.இதற்கு பதிலளித்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கூறியதாவது:நுாற்றாண்டு பழமையான கோவில் என்ற விஷயத்திற்குள் செல்ல விரும்பவில்லை. பழமையான கோவில் எனில், அதற்கு எவ்வித சேதாரமும் ஏற்படாமல் மாற்றியமைக்கப்படும். மூன்று கோவில்களுக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன், மெட்ரோவின் 'அலைன்மென்ட்' மாற்றப்பட்டுள்ளது.கோவில் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நுழைவு வாயிலை மாற்ற முடியுமா என, தொழில்நுட்ப நிபுணர்கள் மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோவில் அமைந்துள்ள பகுதிக்கு நான் நேரடியாக சென்று பார்வையிட உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்குவிசாரணையை ஆக.,2க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.