புழுதிவாக்கம், வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான, எம்.ஆர்.டி.எஸ்., சாலையில் தினமும், பல்லாயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. இதில், புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், பாலாஜி நகர் பிரதான சாலையில் சிக்னல் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.பகுதி மக்கள் கூறியதாவது:புழுதிவாக்கம், பாலாஜி நகர் சாலையிலிருந்து, எதிரே உள்ள ஆதம்பாக்கம் சாலைக்கு செல்ல, 100 மீ., துாரம் பயணித்து, 'யு -டர்ன்' வளைவில் திரும்பி பயணிப்பதால், அந்த இடத்தில் விபத்து அடிக்கடி நடக்கிறது.தவிர, பாலாஜி நகர் பிரதான சாலையிலிருந்து ஆதம்பாக்கம் 40 அடி சாலைக்கு செல்லவேண்டிய மாணவர்கள், பொதுமக்கள், 'மீடியன்' தடுப்புச் சுவரில் உள்ள 2 அடி இடைவெளி வழியாக நுழைந்து, வாகனப் போக்குவரத்து மிகுதியாக உள்ள எம்.ஆர்.டி.எஸ்., சாலையைக் கடந்து செல்கின்றனர். இது உயிர்பலி ஏற்படுத்தும் ஆபத்தான நடைமுறை.எதிரெதிரே உள்ள, பாலாஜி நகர் பிரதான சாலைக்கும், ஆதம்பாக்கம் சாலைக்கும் குறுக்கே உள்ள மீடியனை அகற்றி, ஒரு சிக்னல் அமைத்தால், பொதுமக்கள், மாணவர்கள் சாலையை பாதுகாப்பாக கடப்பதற்கும், வாகனங்கள் எளிதாக செல்வதற்கும் வழி பிறக்கும்.சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.