| ADDED : ஆக 13, 2024 12:26 AM
திரு.வி.க.நகர், திரு.வி.க.நகர், திருவேங்கடம் தெரு, வெற்றி நகரில் பேபி என்கிற சாந்திக்கு சொந்தமான 2,500 சதுர அடி இடத்தில் வீடு உள்ளது.இந்த வீட்டில், கடந்த 15 ஆண்டுகளாக ரவிச்சந்திரன், 50, மற்றும் அவரது சகோதரியர் ஆக்கிரமித்து குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. ரவிச்சந்திரன் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் சென்னை மாநகர ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.இந்த நிலையில், இடத்தின் உரிமையாளரான சாந்தி, வீட்டை ஆக்கிரமித்து குடியிருப்போரிடம் இருந்து வீட்டை மீட்டுத் தருமாறு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று திரு.வி.க.நகர் போலீசார் வீட்டில் உள்ளவர்களை அப்புறப்படுத்தி, வீட்டை பூட்டி 'சீல்' வைத்தனர்.அப்போது, வீட்டினுள் 2 அடி உயரமுடைய கங்கை அம்மன் சிலை இரண்டும், ஒன்றரை அடி அம்மன் சிலை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரித்தபோது, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் இருந்து கொடுத்ததாக கூறியுள்ளார். ஆனால், அவரிடம் அதற்கான ஆவணங்கள் ஏதுமில்லை. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.