சுரங்கப்பாதைக்காக பாதை அடைப்பு போக்குவரத்திற்கு வழியின்றி தவிப்பு
திருவொற்றியூர்:சுரங்கப்பாதை பணிக்காக வழி அடைக்கப்பட்டதால், 30,000க்கும் மேற்பட்ட மக்கள், போக்குவரத்திற்கு வழியின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.திருவொற்றியூர் மேற்கு பகுதியில் ராமநாதபுரம், ஜோதி நகர், பசும்பொன் நகர், சண்முகபுரம், பூம்புகார் நகர், டி.கே.எஸ்., நகர், ஜோதி நகர், மதுரா நகர் போன்ற பகுதிகளில், 30,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருவொற்றியூர் கிழக்கு பகுதியான விம்கோ நகர் மார்க்கெட், திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல, விம்கோ நகர் ரயில் நிலையத்தை ஒட்டிய மூன்று தண்டவாளங்களை, ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டியிருந்தது.இதன் காரணமாக, அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. எனவே, மேற்கு பகுதிவாசிகள் பாதுகாப்பாக ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.அதன்படி, இவ்வாண்டு துவக்கத்தில், 25.09 கோடி ரூபாய் செலவில், விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் வகையில், சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கின.அதன்படி, 24.75 அடி அகலம், 1,128 அடி நீளத்தில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில், ரயில்வே தண்டவாளத்தின் கீழ், 155 அடி துாரம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை பக்கம், 475 அடி துாரம், ராமநாதபுரம் பகுதி பக்கம், 495 அடி துாரம் கட்டுமான பணிகள் நடக்கின்றன. முடக்கம்
பணிகள் ஜரூராக நடந்து வந்த நிலையில், திடீரென ராமநாதபுரம் பக்கத்தில் இருந்து தண்டவாளத்தை கடக்கும் பகுதியில், ரயில்வே கற்களை வைத்து அடைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.மேலும், ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய வகையில் வழி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரயில் பிடிக்க செல்வோர் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.தவிர, மேற்கு பகுதியில் இருந்து பள்ளி, கல்லுாரி மற்றும் வேலை வாய்ப்பு தேடி, கிழக்கு மற்றும் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு செல்வோரும் அதிகம்.மேலும், இந்த பகுதிகளில் யாரேனும் இறந்தால், அவர்களை அடக்கம் செய்ய, இந்த வழியாகத் தான் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றாக வேண்டும்.இந்நிலையில், வழி அடைக்கப்பட்டு விட்டதால், அனைத்து போக்குவரத்தும் முடங்கி விட்டது. மாறாக, அம்பேத்கர் நகர் சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டுமானால், பல கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டும்.அதே போல் ஜோதி நகர், மணலி விரைவு சாலை, எர்ணாவூர் மேம்பாலம் வழியாக செல்ல வேண்டுமானால், பெரும் சிரமம் ஏற்படும்.எனவே, சுரங்கப்பாதை பணிகளை மேற்கொள்ளும் துறை அதிகாரிகள் கவனித்து, மக்கள் வெளியே சென்ற வர ஏதுவாக, வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.