உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதிகாரிகள் ஆசியுடன் அரசு நிலத்தில் மணல் திருட்டு கொசப்பூரில் நள்ளிரவில் மாபியாக்கள் அட்டூழியம்

அதிகாரிகள் ஆசியுடன் அரசு நிலத்தில் மணல் திருட்டு கொசப்பூரில் நள்ளிரவில் மாபியாக்கள் அட்டூழியம்

சென்னை, சென்னை, மாதவரம் பால்பண்ணை அடுத்த கொசப்பூரில் 100 ஏக்கர் பரப்பில், 20 ஆண்டுகளுக்கு முன், 'ஸ்பிக் ஆரோமெடிக்' எனும் பாலி நுாலிழை உற்பத்தி செய்யும் நிறுவனம் இயங்கியது. நாளடைவில், தொழிலாளர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களால், பல ஆண்டுகளுக்கு முன் அந்த நிறுவனம் மூடப்பட்டது.அங்கிருந்த விலை உயர்ந்த இயந்திரங்கள் மற்றும் அடர்ந்து வளர்ந்த மரங்கள் அடிக்கடி திருட்டு போயின. இந்த நிலையில், அந்த இடம் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதன்பின், உள்ளே மணல் திருட்டு அமோகமாக நடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

30 லாரிகளில் கொள்ளை

குறிப்பாக, கொசப்பூர் அடுத்த ஆண்டார் குப்பம்-கன்னம்பாளையம் சாலையில், அரியலுார் ஏரி எதிரில் 50 அடி நீளத்திற்கு, சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, தற்காலிகமாக முட்செடிகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.அங்கிருந்து, அந்த இடத்தின் உட்பகுதியில், மணல் திருடப்படும் இடத்திற்கு, பெரிய 'டாரஸ்' லாரிகள் சென்று வருகின்றன. தினமும், இரவு 11:00 மணி முதல் காலை 8:00 மணி வரை, 20 முதல் 30 லாரிகளில் மணல் திருடப்படுகிறது.வெளியே அடர்வனம் போல் இருக்கும், அந்த இடத்தின் மையப் பகுதியில், பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக, மணல் தோண்டி எடுக்கப்பட்டு, லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், மணல் குவாரிகள் இயங்காத நிலையில், இங்கு கிடைக்கும் மணலுக்கு, கட்டுமான நிறுவனங்களிடம் வரவேற்பு உள்ளதால், 'டாரஸ்' லாரியின் 1 லோடு மணல், 80,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் சீர்கேடு

மாதவரம் பால்பண்ணை போலீஸ் மற்றும் மாதவரம் தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆசியுடன் நடக்கும், மணல் திருட்டால், அரசு நிலம் 'கபளீகரம்' செய்யப்படுகிறது. காற்று மாசை தடுக்கும் வகையில், அங்கு வளர்ந்துள்ள மரங்களும் வேரோடு சாய்க்கப்பட்டு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.ஆங்காங்கே சுற்றுச்சுவர், மழைநீர் வடிகாலும் சேதமடைகின்றன. மேலும், மணல் கொண்டு செல்லும், டாரஸ் லாரிகளின் 'அழுத்தம்' தாங்காமல், மாநகராட்சி சாலைகளும் சேதமடைந்து, லாரிகளில் சிக்கி இரு சக்கர வாகன ஓட்டிகள், உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.கடந்த ஓராண்டாக மணல் திருட்டு நடக்கவில்லை. இந்த நிலையில், லோக்சபா தேர்தலுக்குப் பின், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடத்தின் சுற்றுச்சுவரை இடித்து, மணல் திருட்டு ஜரூராக நடக்கிறது. மேலும், நான்கு ஐந்து இடங்களில், சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன.- சமூக ஆர்வலர்கள்

பகலில் நடப்பது என்ன?

அடர்வனம் போல் உள்ள மேற்கண்ட இடத்தில், பகலில் மணல் திருட்டு நடப்பதில்லை. அப்போது, அடியாட்கள் பாதுகாப்புடன், மண் வெட்டி குவிக்கும் பணிகள் நடக்கின்றன. இரவில், ஆண்டார்குப்பம் - -கன்னம்பாளையம் சாலையில், மணல் திருட்டுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அந்த ஆட்களின் கண்காணிப்பும் தொடர்கிறது. இதே நிலை தொடர்ந்தால், அதன் அருகில், வறட்சி காணத் துவங்கி உள்ள அரியலுார் ஏரியும், மணல் திருட்டில் காணாமல் போகும் அபாயம் உள்ளது.எனவே, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட கனிம வளத்துறையினர், மணல் திருட்டை தடுத்து, சாலைகள் சேதமடைவதைத் தவிர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்புசாமி
மே 11, 2024 15:50

அதிகாரியா இருந்தா என்ன அமைச்சர்களா இருந்தா என்ன அள்ளுறவனா இருந்தா என்ன வன்ங்கறவனா இருந்தா என்ன?


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ