உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெரும்பாக்கம் பள்ளி நிர்வாகத்தில் குளறுபடி 6ம் வகுப்பில் 8 பேர் மட்டுமே சேர்ந்ததால் அதிர்ச்சி

பெரும்பாக்கம் பள்ளி நிர்வாகத்தில் குளறுபடி 6ம் வகுப்பில் 8 பேர் மட்டுமே சேர்ந்ததால் அதிர்ச்சி

சென்னை:பெரும்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளி, மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. கட்டடம், ரோட்டரி கிளப் சார்பில் கட்டி கொடுக்கப்பட்டது.கடந்த கல்வியாண்டில், 650க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்தனர். இதில், 10ம் வகுப்பு வரை, 440 பேர் படித்தனர். பத்தாம் வகுப்பு முடித்த 85 பேர், பிளஸ் 1 மற்றும் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் போன்ற படிப்புக்காக சென்றனர். இதற்கு ஈடாக, ஆறாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும்.கடந்த ஆண்டு, ஆறாம் வகுப்பில், 45 பேர் சேர்க்கப்பட்டனர். இந்த கல்வியாண்டில், பள்ளி திறந்து இரண்டு வாரத்திற்கு மேல் ஆகியும், எட்டு பேர் தான் சேர்ந்துள்ளனர். மொத்த மாணவ - மாணவியர், 500க்கும் குறைவாக உள்ளனர்.மேலும், பள்ளி நிர்வாகம் மீது பெற்றோருக்கு ஏற்பட்ட அதிருப்தியால், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 60க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், 'டிசி' வாங்கி, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.ஏற்கனவே, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதில், ஆறாம் வகுப்பில் போதிய மாணவ - மாணவியர் சேர்க்கை இல்லாவிட்டால், இருக்கிற ஆசிரியர்களையும் குறைக்க வாய்ப்புள்ளது என, பெற்றோர் அச்சப்படுகின்றனர்.ஆசிரியர், தலைமையாசிரியர் இடையே ஒற்றுமையின்மை, மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமை போன்ற காரணங்களால், மாணவ - மாணவியரின் படிப்பு பின்னுக்கு தள்ளப்படுகிறது.இது குறித்து, பெற்றோர் கூறியதாவது:பள்ளி கட்டமைப்பு நன்றாக இருந்ததால், இங்கு பிள்ளைகளை சேர்த்தோம். நிர்வாகம் சீராக நடக்காததால், பிள்ளைகள் படிப்பு பாழாகிவிடும் என அச்சப்படுகிறோம்.புதிய சேர்க்கையின்போது, 800 முதல் 1,000 ரூபாய் வரை வாங்குகின்றனர். கேட்டால், பள்ளி நிர்வாக செலவுக்கு தேவை என்கின்றனர்.பள்ளி கட்டடம் ரோட்டரி கிளப் கட்டி கொடுத்தது. இருக்கை, அலமாரி உள்ளிட்ட பொருட்களை, தொகுதி எம்.எல்.ஏ., தன்னார்வலர்கள் வாங்கி கொடுக்கின்றனர். இருந்தும், பணம் வசூலிப்பது எதற்கு என அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.ஆறாம் வகுப்பு சேர்க்கை முறையாக இருந்தால் தான், பள்ளியின் தரம் உயரும். இதற்கு, நிர்வாகத்தில் சில மாற்றங்கள் செய்ய, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை