ஸ்ரீ டிவியின் 9ம் ஆண்டு விழா ஹிந்து தர்ம காவலர் விருது
சென்னை, அக். 22--சென்னையில் நடந்த, 'ஸ்ரீ டிவி'யின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழாவில், ஹிந்து தர்மத்தை பாதுகாக்க களப்பணியாற்றியவர்களுக்கு, 'ஹிந்து தர்ம காவலர் விருது' வழங்கப்பட்டது.'ஸ்ரீ டிவி'யின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா, கடந்த 19ம் தேதி சென்னையில் நடந்தது. ஹிந்து முன்னணியை சேர்ந்த, திருவள்ளூர் வினோத் கண்ணா, சமயபுரம் சிவாச்சாரியார் குருவாயூரப்பன், ஹைதராபாதை சேர்ந்த ஸ்ரீவனிதா, சுனிதா ஆகியோருக்கு, 'ஹிந்து தர்ம காவலர்' விருது; தென்காசி மாவட்டம், அச்சன்குட்டம் கிராமத்திற்கு, 'ஹிந்து எழுச்சி கிராமம்' விருது வழங்கப்பட்டது. சமூக ஊடகங்களில், ஹிந்து தர்மத்தை பாதுகாக்கும் வகையில் பதிவிடும், 34 தேசபக்த ஊடகவியலாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.விழாவில், கிராம மக்களிடம் பகவத் கீதையை பரப்பி வரும், சுவாமி கீதாம்ருதானந்தா பேசுகையில், ''வெளிநாடு மற்றும் உள்நாட்டு சக்திகள் நம்மை எதிர்த்து வருகின்றன. இவை, நாட்டிற்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கக் கூடும். ஸ்ரீ டிவி போன்ற ஊடகங்கள், இவற்றை முறியடிக்கும் வகையில் சிறப்பாக செயல்படுகின்றன,'' என்றார். ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் பேசுகையில்,''ஹிந்துக்களுக்கும், தேசியத்திற்கும் எதிரான கருத்தாக்கத்தை, பல ஊடகங்கள், மக்கள் மத்தியில் விதைக்கின்றன. இந்த பொய் பிரசாரங்களை, உடனுக்குடன் தகர்த்தெறியும் பணியில், ஸ்ரீ டிவி முக்கிய பங்காற்றுகிறது,'' என்றார்.விழாவில், 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ., மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகன், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால கவுதமன், ஸ்ரீ டிவி தலைமை நிர்வாக அதிகாரி பத்மபிரியா வெங்கடாத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில், குழந்தைகளுக்கான, 'ஸ்ரீ டிவி கிட்ஸ்' சேனல் அறிமுகம் செய்யப்பட்டது.