மாணவர்களின் கல்வி வரலாறு இனி அபார் கார்டில் அறியலாம்
சென்னை, மடிப்பாக்கம், பிரின்ஸ் ஸ்ரீவாரி மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா, நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக சி.பி.எஸ்.இ., மண்டல அதிகாரி தினேஷ் ராம் பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.பின், அவர் பேசியதாவது:தேசிய கல்விக் கொள்கை, 2020ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, இந்த கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்காக 'அபார்' அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த அடையாள அட்டையில், ஒரு மாணவரின் கல்வி குறித்த தகவல்கள் மட்டுமல்லாமல், இதர திறமைகள், சாதனைகள் என, சகல விபரங்களும் பதிவேற்றப்படும்.ஒவ்வொரு மாணவரின் திறன் குறித்த முழு விபரங்களையும் தெரிந்துகொள்வதற்காக, மத்திய அரசு இதை அறிமுகப்படுத்தியுள்ளது.இது 'ஆதார், பான்' போல, ஒரு ஒருகிணைந்த அடையாள அட்டை. நர்சரி முதல் மேல்கல்வி வரை அனைத்து வித தகவல்களும் இடம் பெறும். இது நீட் தேர்வு, வெளிநாடுகளில் கல்வி படிப்பதற்கும் பயன்படும்.இவ்வாறு தினேஷ்ராம் பேசினார்.