உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புறநகர் ரயில்கள் தாமதம் கொருக்குப்பேட்டையில் மறியல்

புறநகர் ரயில்கள் தாமதம் கொருக்குப்பேட்டையில் மறியல்

கொருக்குப்பேட்டை, சூலுார்பேட்டையில் இருந்து சென்னை பீச் ஸ்டேஷன் செல்லும் புறநகர் மின்சார ரயில், நேற்று காலை 9:30 மணியளவில், கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வந்தது. அங்கு சிக்னல் கொடுக்காததால், நீண்ட நேரமாக ரயில் நின்றது. மின்சார ரயிலுக்கு சிக்னல் கொடுக்காமல், கூட்ஸ் ரயிலுக்கு சிக்னல் கொடுத்ததால், ஆத்திரமடைந்த ரயில் பயணியர் 200க்கும் மேற்பட்டோர் திடீரென கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில் இறங்கி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து பயணியர் கூறியதாவது:சூலுார்பேட்டையில் இருந்து சென்னை பீச் ஸ்டேஷன் செல்லும் மின்சார ரயிலை நம்பி, தினமும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், எண்ணுார் பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். ரயில் குறித்த நேரத்தில் வருவதில்லை. தினமும் சிக்னல் காரணமாக கொருக்குப்பேட்டை, பேசின்பாலம் நிலையத்தில் ரயில் நிறுத்தப்படுகிறது. அரை மணி நேரத்திற்கு மேலாக சிக்னல் கொடுக்காமல் தாமதமாகும் ரயில்களால், பயணியர் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடிவதில்லை. இதனால், சம்பள இழப்பு ஏற்படுகிறது. கூலி வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பலமுறை நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.மறியல் காரணமாக, இரு மார்க்கமாக செல்லும் புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தண்டவாளத்தில் வரிசையாக நின்றன. தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி ஜெயகுமார், ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர் கர்ணன், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் சதாசிவம் ஆகியோரின் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்வே அதிகாரிகள் பயணியரிடம் சமரசம் பேசினர். இதுபோன்ற சிக்னல் பிரச்னை இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, 11:30 மணியளவில் பயணியர் கலைந்து சென்றனர். மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி