| ADDED : மே 16, 2024 12:43 AM
ஓட்டேரி, பெரம்பூர் நெடுஞ்சாலையில் மஸ்ஜித் இ ஜமாலியா என்ற மசூதி வளாகத்தில், எம்.ஜே.அலி ஜமால் தனியார் அறக்கட்டளை இயங்கி வருகிறது. நேற்று மதியம் காதர் மொய்தீன் என்பவர் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர், மசூதிக்குள் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடம் விரைந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு நடத்தினர். ஜமாலியா அறக்கட்டளையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவர் கூறியதாவது:ஜமால் முகைதீன் சாகிப் என்பவர், 1923 மற்றும் 1950 ம் ஆண்டு அல் லஜ்னத்து தீனியா, எம்.ஜே அலி ஜமால், நரிக்குடி ஜமால் அவுல்லியா அகில வக்புகளை துவக்கினார். திருச்சியில் ஜமால் முகமது கல்லுாரி, சென்னையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கட்டடம், ஸ்டேட்ஸ் வங்கியின் பல கட்டடங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமானவை. சென்னை அண்ணாசாலையிலும் பல சொத்துக்கள் உள்ளன. கணக்கு பார்த்தால் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளன. ஆனால் அறக்கட்டளை நிர்வாகத்தினர், பல கோடி ரூபாய் சொத்துக்களை விற்று விட்டனர். முறையான ஆண்டு கணக்கை பராமரிக்கவில்லை. கடைசியாக 1995 ல் பொதுக்குழுவை கூட்டினர். தற்போதுள்ள நிர்வாகத்தின் மூத்தவல்லியான சுல்தான், உஸ்மான் போன்றோருக்கு, எந்த விவரமும் தெரியவில்லை. அறக்கட்டளை நிர்வாகத்தை குறிப்பிட்ட சிலர் கட்டுப்படுத்தி சம்பாதித்து வருகின்றனர். ஏழைக்களுக்காக துவக்கப்பட்ட அறக்கட்டளை அவர்களுக்கு பெரிய அளவில் உதவவில்லை. இதனால், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து முறையான புகார் அளிக்கும் படியும், சுமுக தீர்வு ஏற்பட வழிகாண்பதாக போலீசார் கூரினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.