உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துரைப்பாக்கத்தில் மீண்டும் துவங்கியது மூடு கால்வாய் பணி

துரைப்பாக்கத்தில் மீண்டும் துவங்கியது மூடு கால்வாய் பணி

சென்னை:தென் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், சதுப்பு நிலம் வழியாக, துரைப்பாக்கம் ஒக்கியம்மடுவை அடைந்து, அங்கிருந்து, பகிங்ஹாம் கால்வாய் வழியாக முட்டுக்காடு கடலில் கலக்கிறது.வடக்கு பகுதியான வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதியில் இருந்தும், தெற்கு பகுதியான சோழிங்கநல்லுார், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, ஒட்டியம்பாக்கம் பகுதியில் இருந்தும், மழைநீர் ஒரே நேரத்தில் ஒக்கியம் மடுவை அடைகிறது.பெரும்பாக்கம், சோழிங்கநல்லுாரில் இருந்து ஒக்கியம்மடு வழியாக செல்லும் மழைநீர், மீண்டும், சோழிங்கநல்லுார் நோக்கி செல்லும் பகிங்ஹாம் கால்வாய் வழியாக, முட்டுக்காடு கடலில் கலக்கிறது.இதன் நீரோட்ட பாதை, ‛எஸ்' வடிவில், 8.5 கி.மீ., துாரம் உள்ளது. நீரோட்டம் குறைவான சதுப்பு நிலம், நீர்வழிபாதைகள் ஆக்கிரமிப்பு போன்ற காரணத்தால், பருவமழையின்போது தென்சென்னை அதிக பாதிப்புக்கு உள்ளாகும்.இதற்கு தீர்வு காண, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில், ஓ.எம்.ஆரின் குறுக்கே, பகிங்ஹாம் கால்வாயை இணைத்து, மூடு கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.துரைப்பாக்கத்தில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து, ரேடியல் சாலை மற்றும் ரேடியல் சாலை - இ.சி.ஆர்., இணைப்பு சாலை வழியாக, பகிங்ஹாம் கால்வாய் வரை, 2.4 கி.மீ., துாரம், 30 அடி அகலம், 8 அடி ஆழத்தில், நேராக மூடு கால்வாய் அமைக்க, 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.ரேடியல் சாலை - இ.சி.ஆர்., இணைப்பு சாலை பணிக்கு முன், மூடு கால்வாய் பணியை முடித்திருக்க வேண்டும். அதிகாரிகள் இடையே திட்டமிடல் இல்லாததால், மூடு கால்வாய் பணிக்கு முன்பே, இணைப்பு சாலை பணி முடிக்கப்பட்டது. புதிய சாலையில், பள்ளம் எடுத்து மூடு கால்வாய் அமைக்க நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால், துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து ‛எல்' வடிவில், காவல் நிலையம் சாலை வழியாக, மூடு கால்வாயை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது.இதனால், ஓராண்டாக மூடு கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் பணி துவங்கி உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மூடு கால்வாயை நேராக அமைத்திருந்தால், கடந்த ஆண்டே பணி முடிந்திருக்கும். நிர்வாக குளறுபடியால், கால்வாய் இடம் மாறி செல்கிறது.மெட்ரோ ரயில் பணி மற்றும் போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு, ஓ.எம்.ஆர்., குறுக்கே மூடு கால்வாய் அமைக்க வேண்டும். இதனால், ரெடிமேட் கால்வாய் அமைத்து ஓ.எம்.ஆர்., குறுக்கே பதிக்க முடிவு செய்துள்ளோம்.மெட்ரோ ரயில் பணியுடன் சேர்ந்து முடித்தால் பாதிப்பு குறையும். அதற்கு ஏற்ப பணியை திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை