உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடுரோட்டில் காரை நிறுத்தி துாங்கிய போதை ஆசாமி

நடுரோட்டில் காரை நிறுத்தி துாங்கிய போதை ஆசாமி

அரும்பாக்கம், காரை தொடர்ந்து இயக்க முடியாமல் நடுரோட்டில் நிறுத்தி துாங்கிய போதை ஆசாமிக்கு, போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். அரும்பாக்கம் - வடபழனி 100 அடி சாலை நடுவே, நேற்று முன்தினம், தி.மு.க., கட்சி கொடியுடன் சாலையின் நடுவே, கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால், சில மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் சிலர், காரை சோதித்த போது, அதற்குள் ஒருவர் துாங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், காரில் துாங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பினர். கண்களை கூட திறக்க முடியாத அளவுக்கு போதையில் இருந்த நபர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென காரை இயக்கி, அங்கிருந்து செல்ல முயன்றார். அங்கிருந்தவர்களின் உதவியுடன் காரை போலீசார் நகர்த்தி சாலையோரம் நிறுத்தினர். அவரை காவல் நிலையம் அழைத்து விசாரித்த போது, பம்மல் பகுதியை சேர்ந்த சைமன் பிரபு, 48 என்பதும், அதேபகுதியில் இயங்கி வரும் போதை மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிந்து, அபராதம் விதித்தனர். காரின் ஆவணங்களை பறிமுதல் செய்து, அவரை எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !