உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கன்று மரணத்துக்கு காரணமான மகன் மீது தேரேற்றிய மன்னன்

கன்று மரணத்துக்கு காரணமான மகன் மீது தேரேற்றிய மன்னன்

-நீதி வழுவாது ஆட்சி செய்த மனுநீதிச்சோழ மன்னனை, மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தனர். மன்னனுக்கு ஒரு மகன். அவன் பெயர் வீதிவிடங்கன். அவனுக்கு யானை ஏற்றம், குதிரை ஏற்றம், தேர் ஓட்டுதல், வாள் பயிற்சி உள்ளிட்ட சகல கலைகளையும் மன்னர் கற்பித்தார்.ஒருநாள் வீதிவிடங்கன் தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். அந்த வேளையில் ஒரு கன்றுக்குட்டி தெருவில் துள்ளிக்குதித்து வந்தது. இளவரசன் அக்கன்றின்மேல் தேரை ஏற்றிவிட, அங்கேயே தன் உயிரை விட்டது கன்று. கன்றின் மரணத்திற்குக் காரணமாகி விட்டோமே என, அதன் அருகிலேயே அதிர்ச்சியுடன் அமர்ந்தான் இளவரசன்.அக்கன்றின் தாய்ப்பசு, மக்கள் குறைகளை கேட்க மன்னன் கட்டிய ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்தது. மணி ஒலி கேட்டு வந்த மன்னனை, கன்று இறந்து கிடந்த இடத்திற்கு பசு அழைத்துச் சென்றது. நடந்ததைக் கூறி, தானே குற்றவாளியென மன்னன் முன் தலைகுனிந்து நின்றான் வீதிவிடங்கன். இறந்துபோன கன்றை உயிர்ப்பிக்க இயலாது. கன்றின் தாய்ப்பசு படும் வேதனையை, குற்றம் செய்தவனின் தாயும் அனுபவித்தலே சரியான தண்டனை என்ற முடிவுக்கு வந்தான் மன்னன். தானே தேரின் மீதேறி, வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டுக் கொல்ல, தேர் ஏறினான் மன்னன். வேகமாக ஓடிய தேர், வீதிவிடங்கனின் அருகே வந்து நின்று விட்டது. நீதிகேட்ட பசுவும், இறந்து கிடந்த கன்றும் மாயமாய் மறைந்தன. அனைவரும் திகைத்து நின்றனர்.அப்போது விண்ணிலிருந்து வந்த அசரீரி, 'சோழ மன்னா, தேவேந்திரன் சபையில் உமது நீதியின் சிறப்பைப் பற்றிய சர்ச்சை எழுந்தது. உன் நீதியின் சிறப்பை அறியவே தேவேந்திரனாகிய நானும் எமதர்மனும் பசுவாகவும், கன்றாகவும் வந்தோம். உன் நேர்மையும், நீதிவழுவாத் தன்மையும் கண்டு மகிழ்ந்தோம். பல்லாண்டு புகழோடு வாழ்வாயாக' என்று வாழ்த்தி மறைந்தது.இந்த கதையை, நாட்டிய நாடகமாக, தபஸ் மகாலட்சுமி குழுவினர், சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் நேற்று நடைபெற்ற செங்கோல் மறுமலர்ச்சி தினநாளில் நிகழ்த்தி, பார்வையாளர்களின் பாராட்டுதலைப் பெற்றனர்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ