| ADDED : ஜூன் 20, 2024 12:29 AM
ஆவடி, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில், 9வது வார்டில், தென்றல் நகர் 9வது தெரு உள்ளது. இங்கு, 1வது குறுக்கு தெரு முதல் 8வது குறுக்கு தெரு வரை, 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஆவடி மேயர் வார்டான இப்பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சாலை அமைக்க 'டெண்டர்' விடப்பட்டது. அதன்பின் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்த நிலையில், அங்குள்ள குறுக்கு தெருக்களில் கடந்த 2022ல் சிமென்ட் சாலை போடப்பட்டது.அப்போதும், பிரதான சாலையான 9வது தெருவை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், சிறு மழைக்கே குளம் போல் தண்ணீர் தேங்கி மக்கள் அவதி அடைந்தனர்.இது குறித்து, கடந்த 2022 ஆகஸ்ட் மற்றும் கடந்தாண்டு மழையின் போது, தொடர்ந்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் கட்டட கழிவுகள் கொட்டி, சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த சாலை பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்த 'தினமலர்' நாளிதழ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பகுதிவாசிகள் நன்றி தெரிவித்தனர்.