| ADDED : ஆக 22, 2024 12:35 AM
மேடவாக்கம், பள்ளிக்கரணை அடுத்த, மேடவாக்கம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில், வார்டு 11க்கு உட்பட்ட காயத்ரி நகரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கின்றனர்.பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இருந்த, 40 சென்ட் பரப்பு பூங்கா, 2020ல் கொரோனா ஊரடங்கின்போது மூடப்பட்டு, இதுவரை திறக்கப்படவில்லை.இதனால், பூங்கா உள்ளே அமைக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, சிமென்ட் இருக்கைகள் எவ்வித பராமரிப்பும் இன்றி, வீணாகி வருகின்றன.பகுதி மக்கள் கூறியதாவது:பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் பொழுது போக்கவும், பெண்கள், முதியோர் நடைபயிற்சி செய்யவும், இந்த பூங்கா மிக பயனுள்ளதாக இருந்தது. தற்போது பயன்பாட்டில் இல்லாததால், செடி கொடிகள் வளர்ந்து, மழைநீர் தேங்கி, விஷ ஜந்துகளின் புகலிடமாகவும், சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறி வருகிறது.ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால், பூங்காவை திறக்க, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.