உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆறே மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளி கட்டடம்

ஆறே மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளி கட்டடம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், களக்காட்டூர் அடுத்த குருவிமலை கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில் 155 மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.இப்பள்ளியில், 2010ல், அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டத்தின் கீழ், 9.75 லட்சம் ரூபாயில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.கடந்த 2020ல் இக்கட்டடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. நாளடைவில் மோசமான நிலையிலும், அதே வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது.சேதமடைந்த வகுப்பறை கட்டடத்திற்கு மாற்றாக, 61.73 லட்சம் ரூபாயில், புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், புதிய கட்டடத்தில் பைகளை வைத்து, இறை வணக்கக் கூட்டத்திற்கு சென்றனர்.அப்போது, ஏழாம் வகுப்பு மாணவர்கள் அமரும் இடத்தின் கூரையில் இருந்து, சிமென்ட் காரையின் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில், மின்விசிறியின் ஒரு பகுதி சேதமடைந்தது.மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்திருந்தால், பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். அவர்கள் இறைவணக்க கூட்டத்தில் இருந்ததால் தப்பித்தனர்.ஏற்கனவே தரமற்ற நிலையில் கட்டப்பட்டதால், 10 ஆண்டுகளில் கட்டடம் சேதமடைந்தது. அதற்கு மாற்றாக கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டடத்தின் கூரை, ஆறு மாதம்கூட தாக்குப்பிடிக்காமல் பெயர்ந்து விழுந்ததால், அக்கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், மாணவர்கள், பெற்றோர் அச்சமடைந்து உள்ளனர்.

நொறுங்கிய சிமென்ட் பூச்சு

குருவிமலை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விழுந்த சிமென்ட் காரையை கையில் எடுத்தாலே அப்பளம் போல் நொறுங்குகிறது. உறுதித்தன்மையின்றி மிருதுவாகவும், எடை குறைவாகவும் இருப்பதால், மற்ற கூரைகளும் திடீரென பெயர்ந்து விழ வாய்ப்பிருக்கிறது. அதற்கு முன், பள்ளி கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இப்பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர், கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை