| ADDED : மே 07, 2024 12:20 AM
சென்னை, கொளத்துார் பகுதியில் பள்ளி புத்தகங்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தை, நேற்று எஸ்.ஐ., மடக்கி விசாரித்துள்ளார். சிறிது நேரத்தில், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, ஓட்டுனருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.உடனே, அவர் தன்னுடைய மொபைல் போனை எடுத்து வீடியோ பதிவு செய்தபடி, எதற்காக தனக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.அவர் பேசும்போது, 'அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளேன், எந்தவிதத்திலும் சாலை விதிகளையும் மீறவில்லை' எதற்காக அபராதம் விதிக்க வேண்டும் என, பல கேள்விகள் கேட்டார். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் எஸ்.ஐ., திணறினார். இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஒவ்வொரு நாளும் ஒரு எஸ்.ஐ., இத்தனை வழக்கு போட வேண்டும் என, அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்து இருக்கலாம். அவற்றை சரிக்கட்ட வேண்டுமென்றால், இது போன்ற சரக்கு வாகன ஓட்டுனர்களை தான் எஸ்.ஐ.,க்கள் டார்க்கெட் செய்வார்கள். அது தான் இன்று நடந்துள்ளது.பொதுவாக அபராதம் விதிக்கும் எஸ்.ஐ.,களின் சட்டையில் கண்காணிப்பு கேமரா இருக்க வேண்டும். ஆனால் இன்று அபராதம்விதித்த எஸ்.ஐ.,யின் சட்டையில் கேமரா இல்லை.வரும் நாட்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.