ஆவடி, ஆவடி நகராட்சி கடந்த 2019 ஜூலை 19ம் தேதி, 15வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் நான்கு மண்டலங்களில் உள்ள 48 வார்டில், 4,526 தெருக்கள் உள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், 81 ஆயிரத்து 822 பேர் வரி செலுத்துகின்றனர்.ஆவடி காமராஜர் நகர், பட்டாபிராம், சத்திரம், திருமுல்லைவாயில் சோழம்பேடு மற்றும் ஆவடி மாநகராட்சி அலுவலகம் என, நான்கு நிரந்தர வரி வசூல் மையங்களில், பொதுமக்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர்.ஆவடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகள் மட்டும், இன்னும் நகராட்சி நிலையில் உள்ளன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, மேற்கூறிய வரி வசூல் மையங்களில் வழங்கப்படும் சொத்து வரி ரசீதில், இரு விதமான முத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆவடி மாநகராட்சி என சொத்து ரசீதில் குறிப்பிட்டு இருந்தாலும், இன்னும் ஆவடி நகராட்சி என முத்திரை வைக்கப்படுகிறது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.இதனால், வணிக பயன்பாட்டுக்காக இடம் வாடகைக்கு கொடுக்கும் போது, வருமான வரி செலுத்தும் போது, வங்கியில் கடன் பெறும் போது என, பல்வேறு தேவைகளுக்காக சொத்து வரி ரசீது பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், ஆவடி மாநகராட்சியில் இரு வேறு விதமான முத்திரை பயன்படுத்துவதால், பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், ரசீதுகளுக்கு முத்திரையிடுவதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.