வடபழனி அம்மா உணவகம் குப்பை கிடங்கு, புதர்களுக்கு இடையே செயல்பட்டு வருவதால், உணவு உண்ண வரும் ஏழை, எளிய மக்கள் துர்நாற்றத்தால் தவித்து வருகின்றனர்.கோடம்பாக்கம் மண்டலம், வடபழனியில், நெற்குன்றம் பாதை எனப்படும் இணைப்புச் சாலை உள்ளது.இதில், வடபழனி ஆண்டவர் கோவிலுக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிட வளாகம் உள்ளது. இங்குள்ள அம்மா உணவகத்தில், தினசரி நுாற்றுக்கணக்கான ஏழை, எளிய மக்கள் உணவு சாப்பிடுகின்றனர்.இந்த வளாகத்தில், சுற்றுவட்டாரப் பகுதியில் சேகரமாகும் குப்பை கொண்டுவந்து குவிக்கப்பட்டு, அங்கிருந்து கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், தேவையில்லாத கழிவுகள் வளாகத்தில் குவிந்து, குப்பைக் கிடங்கு போல காட்சியளிக்கிறது.தினசரி குப்பையை கொட்டி, அதன் பின் அகற்றுவதால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடால், அம்மா உணவகத்தில் உணவு சமைப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அங்கு உணவு சாப்பிட வருவோர், துர்நாற்றத்தால் தவித்து வருகின்றனர்.அத்துடன், அம்மா உணவகத்தை சுற்றிலும் புதர் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, விஷ ஜந்துக்களும் அவ்விடத்தில் திரிகின்றன.இதுமட்டுமின்றி, ஆண்டவர் கோவில் வாகன நிறுத்தம் பகுதியில் குப்பை கொட்டுவதால் விசேஷம் மற்றும் திருவிழா நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களின் வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.இப்பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, துாய்மை பணியை கவனிக்கும் உர்பேசர் நிறுவனம் மற்றும் போக்குவரத்து போலீசார் தனி கவனம் செலுத்தி, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.- -நமது நிருபர் --