உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்கையோடு நிறுத்தப்படும் ரயில்கள் தென்மாவட்ட பயணியர் அவதி

செங்கையோடு நிறுத்தப்படும் ரயில்கள் தென்மாவட்ட பயணியர் அவதி

சென்னை, தாம்பரம் ரயில்வே யார்டு பணியால், வைகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படுவதால், பயணியர் அவதிப்பட்டனர். தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டுப் பணிகள் அடுத்த மாதம் 14ம் தேதி வரை நடக்க உள்ளன. இதனால், இந்த வழியாக செல்ல வேண்டிய 20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுடில்லி, ராஜஸ்தான், தெலுங்கானா செல்ல வேண்டிய ரயில்கள் அரக்கோணம், பெரம்பூர், கடற்கரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில்கள், வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரவேண்டிய ரயில்கள், செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டன. நேற்று வைகை, ராக்போர்ட், பல்லவன், செங்கோட்டை உள்ளிட்ட விரைவு ரயில்கள், செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்பட்டன. மங்களூர் - எழும்பூர் விரைவு ரயில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்பட்டது. இதனால், பயணியர் அவதிப்பட்டனர்.இது குறித்து, பயணியர் கூறியதாவது: எழும்பூர் செல்ல வேண்டிய விரைவு ரயில்கள், செங்கல்பட்டு ரயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டன. இதனால், அங்கிருந்து மின்சார ரயில்களில் மாறி செல்ல நேரிட்டது. ஆனால், போதிய மின்சார ரயில்களும் இயக்கப்படாததால், மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.எனவே, எழும்பூருக்கு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !