| ADDED : மே 31, 2024 12:09 AM
சென்னை,சென்னை, கோபாலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ்; வழக்கறிஞர். நேற்று மாலை, வீட்டருகே செயல்பட்டு வரும் சி.கே.பேக்கரியில், தன் குழந்தை மற்றும் உறவினர் குழந்தைக்கு,'டோனட் கேக்' வாங்கிக் கொடுத்துள்ளார். வீட்டில் அந்த டோனட் கேக்கை சாப்பிட்ட சிறுமியர் ஹனி கென்சி, அஹானா கென்சி ஆகிய இருவருக்கும், திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.உடனே, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியர் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே, 'டோனட் கேக்'குகள் பூசனம் அடைந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அது குறித்து பேக்கரியில் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.குழந்தைகளின் உறவினர்கள் பேக்கரியை சூழ்ந்ததால், டோனட் கேக்குகள் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன.இதுகுறித்து, ராயப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேற்று இந்த பேக்கரியில் ஆய்வு நடத்தினர். அப்போது, சிறுமியர் சாப்பிட்ட நேரத்தில் இருந்த 'டோனட்' மாதிரியை எடுக்க முடியாமல் போனது.அதேநேரம், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கேக் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. பேக்கரியில், உணவு பாதுகாப்பு துறையின் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்கு விளக்கம் கேட்டு, பேக்கரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.