| ADDED : ஜூலை 25, 2024 12:25 AM
சென்னை,'எக்காரணத்தைக் கொண்டும் கழிவுகளை எரிக்கக் கூடாது. உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக மட்டுமே கழிவுகளை அப்புறத்தப்படுத்த வேண்டும்' என்று, தொழில் நிறுவனங்களுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.அழிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜெகதீசன் என்பவர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு: திருவள்ளூர் மாவட்டம், புழல் அருகே அழிஞ்சிவாக்கம், செல்வ விநாயகர் நகரில் குடியிருக்கிறேன். அங்கு மாஸ்க் எனப்படும் முகக்கவசம் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையைச் சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. மாஸ்க் தயாரிப்பிற்கு பின் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை முறைப்படி அப்புறப்படுத்தாமல், வளாகத்திலேயே எரிக்கின்றனர். இதனால் கடுமையான புகை வெளியேறி, சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கழிவுகளை எரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: அழிஞ்சிவாக்கத்தில் மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோர் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகளை திறந்தவெளியில் எரித்துள்ளனர்.இதுபற்றி அருகே வசிப்போரும், குடியிருப்போர் நலச்சங்கமும் புகார் அளித்த பிறகும், எரிப்பது நிறுத்தப்படவில்லை. காவல் துறையில் புகார் அளித்த பிறகே, எரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.தொழிற்சாலைகள் 2016 பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்ற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட எந்த கழிவுகளையும் எரிக்க கூடாது. கழிவுகளை உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவே அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.