15 கிலோ கஞ்சா எழும்பூரில் பறிமுதல்
எழும்பூர்,: வட மாநிலங்களில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சா, எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து எழும்பூர் வழியாக கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில், எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை 5ல், நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை மடக்கி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, அவரது பையை சோதனை செய்தனர். இதில், எட்டு பண்டல்களில், எட்டு கிலோ கஞ்சா இருந்தது. அவற்றின் மதிப்பு 4 லட்சம் ரூபாய். விசாரணையில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சொப்பனா, 30, என தெரியவந்தது. இவர், ஒடிசாவில் இருந்து திருநெல்வேலிக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து எழும்பூர் வழியாக திருச்சி செல்லும் விரைவு ரயிலில் ஆய்வு செய்தபோது, பெட்டிக்குள் கேட்பாரின்றி கிடந்த டிராவல் பையில் இருந்த ஏழு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 3.5 லட்சம் ரூபாய். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.