சென்னை ஒன் செயலி மூலம் 8 நாளில் 18,000 டிக்கெட்
சென்னை'சென்னை ஒன்' செயலி வாயிலாக, எட்டு நாட்களில், 18,000 பேர் டிக்கெட் எடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் போக்கு வரத்து திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக, 'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்த குழுமம் சார்பில், ஒரே டிக்கெட்டில் மெட்ரோ ரயில், மாநகர பேருந்து, புறநகர் மின்சார ரயில் சேவைகளை பயன்படுத்த, 'சென்னை ஒன்' என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலி, செப்., 22ல் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில், 2 லட்சம் பேர் இந்த செயலியை தங்கள் மொபைல் போன்களில் பதி விறக்கம் செய்தனர். நாளொன்றுக்கு, 2,000 முதல், 3,000 பேர் டிக்கெட் எடுத்து பயணங்களை மேற்கொள்வதாக தெரிய வந்துள்ளது. கடந்த எட்டு நாட்களில், இந்த செயலி வாயிலாக, 18,000 பேர் டிக்கெட் எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
ரயில் பயணியர் கூறியதாவது: 'சென்னை ஒன்' செயலியில், பெரும்பாலானோர் மாநகர பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் பெற்றுள்ளனர். மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுப்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. மெட்ரோ ரயிலில் முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை செலுத்தி, சிங்கார சென்னை அட்டையை மக்கள் பெற்றுவிடுகின்றனர். புறநகர் மின்சார ரயிலில் பயணிப்பவர்கள், யு.டி.எஸ்., செயலியை பயன்படுத்துகின்றனர். யு.டி.எஸ்., செயலியில் மாதாந்திர சீசன் அட்டையை புதுப்பிக்க வசதி உள்ளது. 'சென்னை ஒன்' செயலியில் அந்த வசதி இல்லை. சிங்கார சென்னை அட்டை, யு.டி.எஸ்., செயலியில் உள்ள வசதிகளை சென்னை ஒன் செயலியில் சேர்த்தால், இதன் பயன்பாடு அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.