கவரிங் நகையை வைத்துவிட்டு தங்க செயின் திருடிய 2 பேர் கைது
வளசரவாக்கம்: போரூர் அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் மாதவராமு, 32. இவர், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனிஷ்க் ஜுவல்லரியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 24ம் தேதி, நகைக்கடையில் இருந்த தங்க நகைகளை சரிபார்த்த போது, அதில் தங்க செயின் அடங்கிய பெட்டியில், இரண்டு கவரிங் தங்க செயின் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரையடுத்து, வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். அதில், நகை கடையில் பணிபுரிந்து வந்த ஊழியரான, அண்ணனுார் தேவி நகரைச் சேர்ந்த லோகேஷ், 26, மற்றும் அவரது நண்பர் திருவேற்காடு செல்வகணபதி நகரைச் சேர்ந்த கவுதம், 29, இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. கடையில் வேலை செய்து வந்த லோகேஷ் கொடுத்த திட்டத்தின் படி, அவரது நண்பர் கவுதம் நகை கடைக்கு வாடிக்கையாளர் போல் சென்றுள்ளார். பின், மற்ற ஊழியர்களின் கவனத்தை திசைதிருப்பி, கவரிங் நகையை வைத்துவிட்டு, 19 சவரன் மதிப்பிலான இரு தங்க செயினை திருடிச்சென்றது விசாரணையில் தெரிந்தது. லோகேஷ், கவுதம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 19 சவரன் செயின்களை பறிமுதல் செய்தனர்.