உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டியில் அருகருகே 2 மருத்துவமனைகள் பஸ் வசதி இல்லாமல் நோயாளிகள் அவதி

கிண்டியில் அருகருகே 2 மருத்துவமனைகள் பஸ் வசதி இல்லாமல் நோயாளிகள் அவதி

சென்னை, சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பில், 1,000 படுக்கை வசதியுடன் கூடிய, பல்நோக்கு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.அதன் அருகிலேயே, ஏற்கனவே 151.17 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த தேசிய முதியோர் நல மருத்துவமனை, சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது.இவற்றில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு, பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.இரண்டு மருத்துவமனைகளிலும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில், சென்னையின் மற்ற அரசு மருத்துவமனைபோல், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்து வசதிகள் இல்லாத நிலை உள்ளது.சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்துாரார், ராயப்பேட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், நுழைவாயில்களில் அருகே பேருந்து நிறுத்த வசதி உள்ளது.ஆனால், கிண்டி பல்நோக்கு மற்றும் முதியோர் நல மருத்துவமனை இரண்டும் அருகருகே இருந்தாலும், போதிய பேருந்து வசதிகள் இல்லை.இதுகுறித்து, நம் நாளிதழ் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, இரண்டு மினி பேருந்துகள், கிண்டி பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனைகள் இடையே குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.ஆனால், வெளியூர்களில் இருந்து வரும் பலர், பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும்போது, உரிய நேரத்தில் மினி பேருந்து இல்லாததால், மருத்துவமனைக்கு நடந்தோ அல்லது ஆட்டோ பிடித்து வரும் சூழலோ தான் உள்ளது.தற்போது, அதே சூழலில் முதியோரும் பாதிக்கப்படுவதால், குறைந்தபட்ச பேருந்துகளை, கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனை அருகே வரை சென்று வரக்கூடிய அளவில் பேருந்துகளின் தடத்தை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.குறிப்பாக, கோயம்பேடு மார்க்கத்தில் இருந்து கிண்டி வரும் பேருந்துகளை, ஒலிம்பியா கட்டடம் அருகே உள்ள சிக்னலில், கிண்டி தொழிற்பேட்டை வழியாக திருப்பிவிடும் பட்சத்தில், மருத்துவமனைகள் அருகே, பேருந்து நிறுத்தத்தை ஏற்படுத்த முடியும்.அதேபோல், தி.நகர் மற்றும் சென்ட்ரலில் இருந்து வரும் சில பேருந்துகளை, சைதாப்பேட்டை ஆட்டுதொட்டி வழியாக கிண்டிக்கு திரும்பிவிடும் பட்சத்திலும், மருத்துவமனைக்கு வருவோர் பயனடைய வாய்ப்புள்ளது.இது குறித்து, நோயாளிகள் கூறியதாவது:மருத்துவமனைக்கு நேரடி பேருந்துகள் இல்லாத நிலையில், சில நேரங்களில் பேருந்து நிறுத்தங்களில் மினி பேருந்து நிற்கிறது. மற்ற நேரங்களில் அந்த பேருந்தும் இல்லாத சூழலில், ஆட்டோ பிடித்தோ, நடந்தோ செல்ல வேண்டியுள்ளது.ஆட்டோவிலும், ஒவ்வொரு முறையும் 50 ரூபாய் வரை கொடுப்பது சிரமமாக உள்ளது. எனவே, மாற்றுப்பாதையில் மாநகர பேருந்துகளை இயக்கி, மருத்துவமனைக்கு எளிதில் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில்

மாரடைப்பு அறிகுறி கண்டறியும் கருவிசென்னை, கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்களை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று, பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில், 1.32 லட்சம் புறநோயாளிகள், 27,776 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 1,057 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4.16 லட்சம் பேருக்கு, ரத்த பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.70 படுக்கைகள் கொண்ட கட்டண வார்டும், சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தற்போது, 7.65 கோடி ரூபாய் மதிப்பில், அதிநவீன '3டி பிளட் பேனல் டி.எஸ்.ஏ.,' கருவி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் வாயிலாக, மாரடைப்பு அறிகுறியை கண்டறியலாம். 'சிடி ஸ்கேன்' எடுப்பது, 'ஸ்டன்ட்' பொருத்துவது, ஆஞ்சியோ செய்வது, அறுவை சிகிச்சைகள் செய்வது போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன.இந்த கருவி, தென்மாநிலங்களில் எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லை. முதன் முறையாக, கிண்டி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ளது.பல் மருத்துவ சிகிச்சைக்கு, 55 லட்சம் ரூபாய் மதிப்பில், 'கோன் பீம் சிடி' கருவி; 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 640 வகையான ரத்த மாதிரி பரிசோதனை கருவி உள்ளிட்ட, 10 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை